மாவீரர் தின அஞ்சலி வரலாற்று ரீதியாக மறக்க முடியாதது
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர் தாயகங்களில் காணப்படும் மாவீரர் துயிலுமில்லங்கள் தற்போது சிரமதானம் மூலமாக சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் மாவீரர்களை நினைவு கூறும் அந்த நாள் 27.11.2025 இல் இந்த மாதம் இடம் பெறவுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு,அம்பாறை ,திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகிறது.
அஞ்சலி
தங்களது மாவீரர் நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு கடந்த கால அரசாங்கங்கள் பல தடைகளை விதித்தது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இவ்வாறான தடைகளற்ற நிலையில் உணர்வு பூர்வமாக துயிலுமில்லங்களில் நினைவு கூறுவதற்கு வழி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கில் மன்னாரில் உள்ள பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த ஆண்டு நவம்பர் 27 நினைவு தினங்களுக்கு முன்னதாக, வீரச்சாவு அடைந்த போராளிகளின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் மற்றும் உள்ளூர் நினைவுக் குழு உறுப்பினர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து ஒழுங்கமைக்க, தன்னார்வப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தி நடவடிக்கைகள் தொடங்கின, அதைத் தொடர்ந்து கல்லறை சுத்தம் செய்யப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லமும் சுத்தம் செய்யப்பட்டன.
இதனை குறித்த சம்பூர் ஆலங்குள நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.இதில் முன்னால் போராளிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானத்தை முன்னெடுத்தனர்.
இவ்வாறான நிலையில் மாவீரர் தின நினைவு நாள் தொடர்பில் திருகோணமலையை சேர்ந்த பெண் சிவில் செயற்பாட்டாளர் கோகிலவதணி கண்ணன் தெரிவிக்கையில் " விடுதலை போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் அந்த நாள் கார்த்திகை 27,ல் அனுஷ்டிக்கப்படுகிறது.
தமிழர்களுக்கன கடமை
இதற்காக தமிழர்களின் அன்றைய நாளில் அனைவரும் அவர்களுக்காக உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்த வேண்டும். தமக்கென இல்லாமல் மற்றையவர்களுக்கும் என்ற நிலையில் போராடியவர்கள் தான் மாவீரர்கள் அதற்காக அவர்களை நாம் நினைவு கூற வேண்டிய நிலை ஒவ்வொரு தமிழர்களுக்குமான கடமையாக உள்ளது.
தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக போராடியவர்களுக்காக இந்த புனிதமான நாளில் அஞ்சலி செலுத்தி நினைவு கூற வேண்டும் " எனவும் தெரிவித்தார்.

ஆனால் கடந்த காலங்களில் மாவீரர் துயிலுமில்லங்களில் அன்றைய நினைவஞ்சலி நாளில் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தங்களது உணர்வு பூர்வமான அஞ்சலிகளை செலுத்தினர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக துயிலுமில்லங்கள் வடகிழக்கில் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுதந்திரமாக எந்த வித தடையுமின்றி அஞ்சலி செலுத்தக் கூடிய சூழல் ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் காணப்பட வேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
வரலாற்றில் முதல் ஆண் மாவீரர் லெப்.சங்கர் என்றழைக்கப்படும் செல்வச் சந்திரன் சத்தியநாதன் ஆவார். இவர் 1982ல் நவம்பர் 27ல் வீரச்சாவடைந்தார். இந்த நாள் மாவீரர் தினமாக உலகத் தமிழர்களால் நினைவு கூறப்படுகிறது.
முதலாவது மாவீரர் துயிலுமில்லம் கோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது போன்று சாட்டி மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் போன்றன யாழ் மண்ணில் உள்ளன.
துயிலுமில்லம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களும் உள்ளன.
முல்லைத் தீவில் விசுவமடு தேதேராவில் மாவீரர் துயிலுமில்லம், அளம்பில்,ஆலங்குளம், விளாங்குளம் போன்றனவும் உள்ளன. இது போன்று மன்னாரில் ஆட்காட்டி,பண்டி விரிச்சான், முள்ளிக்குளம் போன்ற மாவீரர் துயிலுமில்லங்களும் உள்ளன.

அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு போன்ற துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன. அத்தனை துயிலுமில்லங்களும் சுத்தமாக்கப்பட்டு தற்போது நினைவஞ்சலிக்கு தயாராகி வருகின்றனர். மொத்தமாக 20க்கும் மேற்பட்ட துயிலுமில்லங்களும் 20000 க்கும் மேற்பட்ட கல்லறைகளும் காணப்படுகின்றன.
ஏறத்தாழ 40,000 வரையிலான மாவீரர்களை தமிழ் ஈழம் கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் அன்றைய வரலாற்று ரீதியாக மறக்க முடியாத வலி சுமந்த நாளாக இந்த நாள் காணப்படுகிறது.இதனை நினைவு கூர்வது ஒவ்வொருவருவரினதும் தலையாய கடமையாகவும் உள்ளது.
இது குறித்து திருகோணமலை மாவட்ட வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்க தலைவி செபஸ்டியன் தேவி தெரிவிக்கையில் " எமது மண்ணுக்காக பாடுபட்டவர்களே மாவீரர்கள் இவர்களை எமது சமுதாயம் நினைவு படுத்த வேண்டும் அந்த நாளை எம்மால் மறக்க முடியாது.
இது போன்று பொது மக்களை இனவழிப்பு செய்தார்கள். வீர மரணமடைந்தவர்களின் ஞாபகமாக அவர்களுக்காக அஞ்சலி செலுத்த வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இது போன்று கடத்தப்பட்டு காணாமல் போனோர்கள் உட்பட மாவீரர்களுக்குமான நீதியை சர்வதேசம் தான் பெற்றுத்தர வேண்டும்.
நீதிப் பொறிமுறை
பல முறை போராடிய போதும் நீதி மறுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கான நீதியை இந்த நினைவு நாளில் ஆவது தர வேண்டும்.
ஒவ்வொரு தாயின் கண்களில் கண்ணீரும் மனவேதனையும் எமக்குள் குடி கொள்கிறது இப்போது கூட சொல்கிறேன் எமக்கான நீதிப் பொறிமுறையை சர்வதேசம் மூலமாக நடைமுறைப்படுத்தி தீர்வை தாருங்கள் " எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான தாய் தனது மகனை இழந்து பரிதவித்து பல வருட காலமாக சர்வதேச நீதி கோரி போராடி வருகின்றார். தமிழர்களுக்கான நீதி நியாயமற்ற நிலையில் கடந்த கால அரசாங்கமும் பல்வேறு சாட்டுப் போக்குகளை சொல்லி அரசியல் தீர்வு போன்று நிரந்தரமற்ற கதைகளை கூறி வந்தனர்.
வடகிழக்கு மக்கள் யுத்த காலத்தில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். தமிழ் மக்களுக்கான பல நினைவு நாட்கள் வருகின்ற போதும் கூட அதனை சுதந்திரமாக நினைவு கூற முடியாத நாட்கள் காணப்பட்டன.
ஆனால் தற்போதைய அரசாங்கம் அதற்காக சாதகமான நிலையை ஏற்படுத்தி முழுமையான உரிமைகளுடனும் சுதந்திரத்துடனும் வழி விடுவார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
எது எப்படியாயினும் மாவீரர் தின நிகழ்வு வடகிழக்கில் உள்ள துயிலுமில்லங்களில் உணர்வு பூர்வமாக மலர் தூவி ஈகைச் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட ஒத்துழைப்புக்களை அரசாங்கம் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.