மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி!
செங்கலடி- கித்துள் பகுதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று(13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கரடியனாறு இராயபுரத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரபாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
குறித்த நபர் சம்பவ தினமான நேற்று மாலை 6.30 மணியளவில் உறுகாமத்திலுள்ள பேருந்தின் உரிமையாளரின் வீட்டில் பேருந்தை கொண்டு சென்று நிறுத்திவிட்டு கடமையை முடித்து கொண்டு இராஜபுரத்திலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பிரயாணித்து கொண்டிருந்தார்.

அப்போது மரப்பாலத்தில் இருந்து கித்துள் நோக்கி பிரயாணித்த உழவு இயந்திரமும் கித்துள் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சாரதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.