முல்லைத்தீவில் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் பகுதியளவில் முழ்கியுள்ளது.
சமீபத்திய தகவலின் அடிப்படையில் 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று காலை 9 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 261 குடும்பங்களை சேர்ந்த 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
வான்பாயும் குளங்கள்
இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 44 குடும்பங்களை சேர்ந்த 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்கும் பணி நடைபெற்றுவருவதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு வான் பாய்கின்ற நீரானது மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இது மட்டுமன்றி முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் கிராமங்களில் உள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் நீர்பாசன திணைக்களம், கமநலசேவை திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளதுடன் வான்பாய்கின்ற முத்தையன் கட்டு குளத்தின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
