ஹட்டன் - கொழும்பு வீதியின் ஒரு வழிப்பாதை திறப்பு! சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை பகுதியில் தடைப்பட்டிருந்த ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குயில்வத்தை பகுதியில் இன்று (15) அதிகாலை 1.00 மணியளவில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதி முற்றாக தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த மண்மேடு அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
எனினும், தற்போது போக்குவரத்திற்காக ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டுள்ள போதிலும், மீண்டும் மண்மேடு சரிந்து விழும் ஆபத்து நிலவுவதால் அப்பாதையூடாக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து, பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே மண்சரிவுகள், நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனால் பாதிப்புக்குள்ளான வீதிகளை உரிய முறையில் சீரமைக்கும் வரை அந்த வழியில் செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

