புதிய தோற்றத்துடன் ஹட்டன் பேருந்து தரிப்பிடம் (Photos)
ஹட்டன் பேருந்து தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பேருந்து தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று (16.09.2023) கையளிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பேருந்து தரிப்பிடமானது குன்றும், குழியுமாக மழைகாலங்களில் நீர் தேங்கி இருப்பதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் பேருந்து தரிப்பிடத்தை புனரமைத்துதருமாறு மக்கள், சாரதிகள், நடத்துனர்கள் உள்ளிட்டோர் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடமும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனிடமும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன்பிறகு, பேருந்து தரிப்பிட நிலைய வீதி மற்றும் வடிகாலமைப்பு ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டு இன்றைய தினம் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கையளிப்பு நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர் ஜூன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் குமாரசுவாமி, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பிரத்யேக செயலாளர் நவரட்ணம், இணைப்பு செயலாளர் ஜெய பிரமதாஸ், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், ஹட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர், ஹட்டன் சாரதி சங்கங்களின் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.