இலங்கை வரலாற்றில் மற்றுமொரு பெண் பிரதமர்! யார் இந்த ஹரிணி
உலகின் முதலாவது பெண் பிரதமரை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்ற இலங்கை நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இலங்கையின் பெண் பிரதமர்களாக 1960 இல் சிறிமாவோ பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இவர் உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதேவேளை சிறிமாவோ பண்டாரநாயக்க மூன்று முறை இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க, 1994 இல் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இவர்களை தொடர்ந்து இலங்கை வரலாற்றில் பெண் பிரதமராக ஹரிணி அமரசூரிய தடம் பதித்துள்ளார்.
பெண் பிரதமர்
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஹரிணி அமரசூரிவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.
இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதியின்படி, ஹரிணி அமரசூரியவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து இலங்கையின் 16 வது நாடாளுமன்றத்தில் நுழைவதற்கான தேசிய பட்டியல் வேட்பாளராக 12 ஆகஸ்ட் 2020 அன்று ஜே.ஜே.பி.யால் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்.
2019 இல் தேசிய புத்திஜீவிகள் அமைப்பில் சேர்ந்த ஹரிணி, 2019 ஆம் ஆண்டின் இலங்கை ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்காக பிரசாரம் செய்தார்.
அன்று முதல் இளைஞர் வேலையின்மை, பாலின சமத்துவமின்மை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கல்வி முறைமையில் உள்ள திறமையின்மை போன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி ஆய்வுகளை செய்து அவை தொடர்பில் குரல் கொடுத்து அரசியலில் களமிறங்கினார்.
சமூக ரீதியான பிரச்சினைகள்
கருத்தியல் ரீதியாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் மைய-இடதுசாரி என கூறப்படும் ஹரிணி, தன்னை ஒரு லிபரலாக அடையாளப்படுத்திக்கொள்வதாக கூறப்படுகின்றது.
சமூக ரீதியான பிரச்சினைகளில் அதிகம் கவனம் செலுத்தும் ஹரிணி, 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி, கொழும்பில் பிறந்தார்.
இலங்கையின் கல்வியாளர், உரிமை ஆர்வலர், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் அரசியல்வாதி என பல வழிகளில் அறியப்பட்ட ஓர் புத்திஜீவியாக ஹரிணி திகழ்கிறார்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஹரிணி, பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் உறுப்பினராக இணைந்து கொண்ட பின்னர், இலவசக் கல்விக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டார்.
அதுமட்டுமன்றி இளைஞர்கள், அரசியல், கருத்து வேறுபாடு, செயல்பாடு, பாலினம், வளர்ச்சி, மாநில சமூக உறவுகள், குழந்தைகள் பாதுகாப்பு, உலகமயமாக்கல் மற்றும் மேம்பாடு பற்றிய ஆய்வுகளை நடத்தியுள்ளார்.
இவர் தற்போது நெஸ்ட் என்ற இலங்கை உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
விமர்சனங்கள்
ஹரிணி இவ்வாறான சமூக பிரச்சினைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் போதும் அவை தொடர்பான கருத்துக்களை பதிவிடும் போதும் பல வழிகளில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஓரினச்சேர்க்கை உறவுகளை தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமற்றதாக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்தவினால் முன்வைக்கப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினராக கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பலர் இது தொடர்பில் எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்த போதும் அவர் தனது கருத்திலும் கட்சியின் முடிவிலும் உறுதியாக இருந்தார்.
இதேபோன்று பல தவறான தகவல் மற்றும் தவறான பிரசாரங்களால் ஹரிணி அமரசூரிய, அடிக்கடி இலக்கு வைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒவ்வொருமுறையும் தன்மீதான விமர்சனங்களுக்கு தகுந்த ஆதாரம் இல்லை என்பதை நிரூபிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்.
மேலும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்களை பெரும்பாலும் மறுத்து அவற்றிற்கான விளக்கங்ளை முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் யானைகள் இல்லாமல் கண்டி தலதா பெரஹெரா நடத்த வேண்டும் என்று ஹரிணி அமரசூரிய கூறியதாக ஒரு குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த குற்றச்சாட்டு தொடர்பான உண்மைத்தன்மையை தெளிவாக முன்வைத்து தனது தரப்பு நியாயங்களை முன்வைத்தார்.
அரசியல் வாழ்க்கை
இவ்வாறு ஹரிணி பல விமர்சனங்களுக்கு உள்ளாவது புதிதல்ல, காரணம் அவர் தேசியப் பட்டியல் வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்விசார் சிரேஷ்ட விரிவுரையாளராக ஹரிணி தனது சேவையைத் தொடர முடியுமா என்ற குழப்பங்களும் கவலைகளும் எழுப்பப்பட்டன.
இருப்பினும், ஒரு நேர்காணலில், அவர் தனது அரசியல் வாழ்க்கை மற்றும் நாடாளுமன்ற அரசியலைத் தொடரும் பொருட்டு திறந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தினார்.
இதனூடாக அரசியலில் ஹரிணியின் ஆர்வத்தை அனைவருக்கும் தெரியப்படுத்திய இவர், தற்போது இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் எனும் பெருமையுடன் அடுத்த சிறிமாவோ பண்டாரநாயக்கவாக அல்லது மற்றுமொரு சந்திரிக்கா அம்மையார் போன்று திகழ்வார் என மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |