இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றில் இதுவரை யாரும் எதிர்பாரா விதமாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ளார்.
இதுவரை நாட்களிலும் அரச தரப்பு மற்றும் எதிர்தரப்பில் இருந்து போட்டியிட்டு பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று வந்திருந்த நிலையில் தற்போது முதன்முறையாக யாரும் எதிர்பாரா விதமாக அநுரவின் இந்த வெற்றி பதிவாகியிருக்கின்றது.
இலங்கை மாத்திரமல்லாமல் உலக நாடுகளும் வியந்து நோக்கும் அளவுக்கு இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
மாற்றத்தை நோக்கிய பயணம்
மிக நேர்த்தியான ஒழுங்கமைப்பு, திட்டமிடல் போன்றவை அநுரவின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றது. இதற்கு முன்னரான நாட்களில் பரம்பரையாக நாங்கள் இந்த கட்சிக்கு ஆதரவு எனவே இந்த முறையும் அதே கட்சிக்குத் தான் வாக்களிப்போம் என்ற மரபு மாற்றமடைந்திருந்ததை கண்கூடாக காண முடிந்துள்ளது இந்த தேர்தலில்.
குறிப்பாக மாற்றத்தை நோக்கிய அநுரவின் பயணம் என்ற கொள்கை நிறைவேறியுள்ளது என்று கூட கூறலாம்.
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள முதியன்சேலாகே அநுர குமார திசாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம கிராமத்தில் பிறந்தார்.
அவரது தந்தை ஒரு தொழிலாளி அவரது தாய் ஒரு இல்லத்தரசி. திசாநாயக்க, தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புதேகம மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்று, கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக பிரவேசத்தைப் பெற்ற முதல் மாணவராக அவர் இருந்திருக்கின்றார்.
பள்ளிப் பருவத்திலிருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டு குறித்த அணியில் இணைந்திருந்த அநுர குமார, 1987இல் ஜே.வி.பி.யில் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறினார். ஒரு வருடம் கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். பின் 1995 இல் பௌதீக விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் பெற்றதோடு அதே ஆண்டில், அவர் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும் ஜேவிபியின் மத்திய செயற்குழுவிலும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜேவிபி கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கீழ் பிரதான அரசியலில் மீண்டும் பிரவேசித்த ஜே.வி.பி, 1994 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவை ஆதரித்தது, இருப்பினும் விரைவில் குமாரதுங்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தது.
2000 ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், இன்று வரை எம்.பியாக இருக்கிறார். 2004 இல் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் , விவசாய அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார். 2005இல் சந்திரிகா அரசில் இருந்து விலகினார்.
2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். 2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார் அநுர குமார.
அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது. 2015இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார்.
2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும்
1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுனரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதன் பின்னர் 1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது. 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது.
2019இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க மூன்று வீத வாக்குகளை மட்டும் சுமார் நான்கு லட்சத்து எண்பத்து ஐயாயிரம் அளவிலான வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தார். அதன் பின்னரான நாடாளுமன்றத் தேர்தலிலும் 3 எம்பிக்களை மட்டுமே அவர் தரப்பால் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரமுடிந்தது.
அதனையடுத்து, இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காலமும், அதனோடான போராட்டக் காலமும் இன்றைய அநுரவின் வெற்றிக்கு வித்திட்ட வித்து என்று கூட கூறலாம்.
கிட்டத்தட்ட, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் எப்படி கோட்டாபயவின் வெற்றிக்கு வழிவகுத்ததோ, அப்படியொரு நிலையையே அநுரவின் வெற்றிக்கு அரகலய காலம் வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத ஒன்று.
குறிப்பாக, இம்முறை முதன்முறையாக வாக்களிக்கத் தகுதிப்பெற்ற இளையோர்களின் முதன்நிலை தெரிவாக அநுர இருந்திருக்கின்றார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.
அத்தோடு, ரணில் இழைத்த தவறுகளும் கூட அநுரவின் வெற்றிக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தன. குறிப்பாக அரகலயவின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகள், ஒடுக்குறைகள் போன்றவை ரணில் மீதான அதிருப்திக்கும், அநுர மீதான ஈர்ப்புக்கும் காரணமாகியிருந்தன.
அத்தோடு, அரச ஊழியர்கள் சம்பள பிரச்சினையின் போதும் போராட்டங்களின் போதும் அதனை கையாள்வதற்கு ரணில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ரணில் மீதான அரச ஊழியர்களின் வெறுப்புக்கு காரணமாகியதோடு, அது அநுரவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
எது எவ்வாறாயினும் மாற்றத்தை விரும்பிய பலருக்கு அநுரவின் வெற்றி சிறிய அல்ல மிகப்பெரிய மாற்றமாகவே அமைந்துள்ளது...