ராஜபக்சக்களின் கோட்டைக்குள் இருந்து தூக்கி வீசப்பட்ட நாமல்!
பெரும் அரசியல் பின்புலத்தை கொண்ட நாமல் தனது சொந்த மண்ணில் குறைவான வாக்குகளை பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இதுவரைகாலமும் ராஜபக்சர்களின் கோட்டை என கூறப்பட்ட அம்பாந்தோட்டையிலிருந்து வாக்குகளின் மூலம் நாமல் தூக்கி வீசப்பட்டார்.
9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நிறைவடைந்துள்ளது.
நாமலின் தோல்வி
இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.
இந்த ஜனாதிபதி தேர்தல் பலரின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் மக்களின் வாக்குரிமையின் பலத்தை உணர்த்துவதாகவும் அமைந்தது என்பதில் ஐயமில்லை.
காரணம் இதுவரை காலமும் சகோதர மொழி மக்களால் கொண்டாடப்பட்ட ராஜபக்ச குடும்பம் இன்றைய தேர்தல் முடிவுகளின் ஊடாக மக்கள் மனதிலிருந்து எந்தளவிற்கு வெறுப்பை சம்பாத்தித்துள்ளனர் என அறியமுடிந்தது.
ராஜபக்சர்களின் ஆட்சி
இதற்கான சிறந்த உதாரணமாக ராஜபக்சர்களின் ஆட்சி பகுதியில் களமிறங்கிய பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச ஏனைய வேட்ர்பாளர்கள் மத்தியில் படுதோல்வியை தழுவினார்.
தமது ஆட்சி பகுதியான அம்பாந்தோட்டையில் நாமல் ராஜபக்ச 26,707 வாக்குகளைப் மாத்திரமே பெற்றுக்கொண்டார். இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 6.25 சதவீதமாகும்.
இவருடன் போட்டியிட்ட ஏனைய ஜனாதிபதி வேட்ர்பாளர்களில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்த அநுரகுமார, நாமல் ராஜபக்சவை விட 195,206 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
அப்பா, பெரியப்பா என பரம்பரை பரம்பரையாக இலங்கையை ஆண்டு வந்த பெரும் அரசியல் பின்புலத்தை கொண்ட நாமலின் இந்த படுதோல்வி பொது மக்களின் பலத்தை நிரூபித்துள்ளது.