இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு புதிய தலைமைகள்
இந்த ஆண்டு இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இருபதுக்கு20 போட்டிகளில் ஹர்டிக் பாண்டியாவும் (Hardik Pandya) ஒரு நாள் போட்டிகளில் கே.எல். ராகுலும் (K.L. Rahul) இந்திய அணியின் தலைவர்களாக செயற்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நடந்து முடிந்த இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, அணித்தலைவர் ரோஹித் சர்மா இருபதுக்கு20 போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்திருந்தார்.
அத்துடன், இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்தும் ரோஹித் சர்மாவுக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஹர்டிக் பாண்டியா
இந்நிலையிலேயே, இந்திய கிரிக்கெட் சபை ஹர்டிக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுலை அணித்தலைவர்களாக செயற்பட வைக்கும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெரிதாக சோபிக்காத ஹர்டிக் பாண்டியா, இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரில் சகல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டு இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
மறுபுறம், ஒரு நாள் உலகக்கோப்பையில் சிறப்பாக செயற்பட்டிருந்த போதிலும், கே.எல். ராகுல் இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.
கே.எல். ராகுல்
2023ஆம் ஆண்டு உலககோப்பைத் தொடரில், 9 இன்னிங்ஸில் விளையாடிய ராகுல், 77.20 என்ற சராசரியுடன் 386 ஓட்டங்களை பெற்றதோடு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
எனவே, ஒரு நாள் போட்டிகளில் ராகுல் சிறப்பாக செயற்படக் கூடியவர் என்ற அடிப்படையில் அவர் தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய அணியின் தலைமை பயிறுவிப்பாளராக முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |