நுவரெலியா - கித்துள்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு : விசாரணைகள் தீவிரம்
நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(12.08.2026) கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைகுண்டு ஒன்று காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கித்துள்கலை பொலிஸார், குறித்த கைகுண்டு தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், அதிரடிப்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
கைகுண்டு மீட்கப்பட்ட பகுதி
இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து சம்பவ இடத்தை பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மீட்கப்பட்ட கைகுண்டை உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த கைகுண்டு எவ்வாறு அப்பகுதிக்கு வந்தது, அது எவ்வளவு காலமாக அங்கு இருந்தது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பாக கித்துள்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைகுண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

