கிரீஸ் – இஸ்ரேல் ஆயுத ஒப்பந்தம்: மாறுபட்ட அபிப்பிராயங்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்ப்பு
கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பில் பிராந்திய நாடுகளிடையே மாறுபட்ட எதிர்வினைகள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஏதென்ஸ் நகரில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இந்த ஒப்பந்தம் குறித்து துருக்கியிடம் இருந்து நேர்மறையான கருத்துக்கள் வெளிவர வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.
வான் பாதுகாப்பு உதவி
இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்வதன் மூலம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கிரீஸும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என துருக்கிய ஊடகப் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், பல்கேரியா, வட மெசிடோனியா மற்றும் அல்பேனியா போன்ற நாடுகளிடமிருந்து இதற்கு சாதகமான பதிலளிப்புகள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய போர்க் காலத்தில் பல்கேரியா கிரீஸிடம் வான் பாதுகாப்பு உதவியைக் கோரியிருந்த நிலையில், பல்கேரிய வான்வெளியைப் பாதுகாப்பதற்காக கிரீஸ் தனது 'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு அமைப்புகளை அங்கு நகர்த்தியிருந்தது. இதேபோன்று சவூதி அரேபியாவிலும் கிரீஸ் இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கிரீஸ் மற்றும் துருக்கி இடையிலான பாரம்பரிய போட்டித்தன்மை காரணமாக அங்காராவிலிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் எழக்கூடும் அதேவேளை, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து இதற்கு ஆதரவான கருத்துக்கள் வெளிவரக்கூடும் எனக் கருதப்படுகிறது.