சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்து கவலையடையும் பிரதமர் ஹரிணி
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது சிறுவர்கள், பெண்கள் மற்றும் நிர்க்கதியானவர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது, ஒரு பண்பாடான மனிதனின் தேவை தெளிவாகப் புலப்படுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கம்பஹா நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று(07.09.2026) நடைபெற்ற 'கம்பஹா இலக்கிய விழாவில்' பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்து
மேலும் தெரிவிக்கையில், "பண்பாடான மனிதர் என்பவர் புத்தகங்கள் மற்றும் நூல்களிலிருந்து அறிவை மட்டும் பெற்றவரோ அல்லது மனப்பாடம் செய்தவற்றை முன்வைப்பவரோ அல்ல. மாறாக, இலக்கியப் படைப்புகளின் ஊடாகத் தனது உள்ளார்ந்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு, மனிதநேய உணர்வைச் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் ஒருவரே பண்பாடான மனிதராவார்.

அத்தகைய மாற்றத்தையும் உணர்வுபூர்வமான தன்மையையும் கொண்ட மனிதரால் வேறு எந்தவொரு நபருக்கும் அவமதிப்போ, மனவேதனையோ அல்லது அவமரியாதையோ ஏற்படாது.
'பண்பாடான பிரஜையொன்றைக் கண்டடைதல்' என்ற இக்கருப்பொருள் மிகவும் காலத்துக்கேற்றதாகும்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இணையாக, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பண்பாடான மனிதனை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.
மாற்றத்துக்கான பயணத்தை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவையாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.








நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23