மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய விடுதலைப் புலிகள்! போரின் இறுதிக்கட்டம் குறித்து மனம் திறந்த சவேந்திர சில்வா
நாட்டின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, நிராகரித்துள்ளார்.
இந்தியாவை தளமாகக் கொண்ட சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பதிலளிக்கத் தயார்
2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், தமக்கு எதிராக சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான அடிப்படை என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளதாகவும் குறி்பிட்டுள்ளார்.
அமெரிக்காவினால் தனக்கும் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் பிரித்தானியாவும் தமக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“எதற்காக எனக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன? நான் என்ன தவறு செய்தேன் என்பதை தெரிவிக்குமாறு தொடர்ந்து கேட்டு வருகின்றேன். நான் போர்க்குற்றவாளி அல்ல. எனது நாட்டுக்காகவே போராடினேன்” என அவர் தெரிவித்தார்.
இராணுவ சட்டங்களை தாம் மீறியிருந்தால், உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டு அமெரிக்கா, போரின் இறுதிக்கட்டத்தில் கட்டளைப் பொறுப்பு ஊடாக மனித உரிமைகளின் பாரிய மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டதாக நம்பகமான தகவல்கள் இருப்பதாகக் கூறி, அவருக்கும் அவரது நெருங்கிய குடும்பத்தினருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு பிரித்தானியாவும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சவேந்திர சில்வாவுக்கு தடைகளை விதித்திருந்தது.
இராணுவத்தின் நோக்கம்
இராணுவம் திட்டமிட்டு பொதுமக்களை இலக்குவைத்ததாக முன்வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுகளையும் சவேந்திர சில்வா நிராகரித்தார்.எனினும், மோதல்களின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.
பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவது இராணுவத்தின் நோக்கமாக இருக்கவில்லை என்றும், இராணுவ நடவடிக்கைகளை திட்டமிடும்போது பொதுமக்கள் உயிரிழப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
போரின் இறுதிக்கட்டத்தில் தமது படைப்பிரிவு 123,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டதாகவும், போர் முடிவில் சரணடைந்த சுமார் 12,000 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமது படைப்பிரிவிடம் சரணடைந்ததாகவும் அவர் கூறினார்.

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டதாகவும், ஆயுதங்களை கைவிட்டவர்களிடம் இராணுவம் எவ்வாறு அணுகுமுறையை மேற்கொண்டது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அந்த நடவடிக்கையில் பெருமளவான விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் விடுதலைப் புலிகளின் வடக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி ஒருவரும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட சவேந்திர சில்வா, இவ்வாறான சூழ்நிலைகளில் பொதுமக்கள் உயிரிழப்புகள் எனக் குறிப்பிடப்படும் சிலர் உண்மையில் ஆயுதம் தாங்கிய போராளிகளாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுத்ததாகவும் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டினார்.
விடுதலைப் புலிகள்
மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் விடுதலைப் புலிகள் இராணுவ வளங்களை நிலைநிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச மட்டத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் போதிய விளக்கங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகவும் சவேந்திர சில்வா விமர்சித்தார்.
இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சம்பவத்தில் நீங்கள் இதனைச் செய்தீர்கள் எனக் கூறுங்கள். அதற்கு நாங்கள் விளக்கம் அளிப்போம். ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வோம்” என அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பு என்ற கருத்தையும் சவேந்திர சில்வா நிராகரித்தார்.மக்களின் குறைகளை ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்ப்பதற்கு பதிலாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கை
அதேவேளை, ஒரு அமைப்பு அல்லது அதன் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த இன அல்லது மத சமூகத்தையும் குற்றஞ்சாட்டக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களை விடுவிப்பதுமே இராணுவத்தின் நோக்கமாக இருந்ததாகவும், பொதுமக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் திட்டமிட்டு அத்துமீறல்களில் ஈடுபடவில்லை என்றும் சவேந்திர சில்வா மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பில் சர்வதேச அளவில் நீண்டகாலமாக விசாரணைகளும் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன.
இறுதிக்கட்ட மோதலின்போது அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
எனினும், சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள், பொதுமக்களை இலக்கு வைத்து அரச படைகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர்.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri