பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு
பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமக்கான நியமனங்களை உறுதிப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இன்று(8.2.2026) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு
இதன்போது கருத்து தெரிவித்த சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் என்று சொல்வதை விட ஏமாற்றப்பட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. எமது உரிமைகளுக்காகப் போராடுகின்றவர்கள். அந்த வகையில் இந்த ஆண்டில் அரசாங்கத்தினால் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அனைத்து மாகாணத்தையும் எடுத்து நோக்கும் போது கிழக்கு மாகாணம் மாத்திரம் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
விசேட சலுகைகள்
அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதாகக் கூறி அதிகளவான விளம்பரங்கள் விடப்பட்டாலும், உண்மை நிலவரம் இந்த அறிக்கையைப் பார்க்கும் போதே தெரிய வந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக எதுவித போட்டிப் பரீட்சைகளுக்கும் உள்வாங்கப்படாமல் இருக்கின்றார்கள்.
நாங்கள் விசேட சலுகைகள் எதுவும் கேட்கவில்லை. போட்டிப் பரீட்சைகளுக்கான வாய்ப்புகளையே தருமாறு கேட்கின்றோம் என்று தெரிவித்தனர்.
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri