இலங்கையில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தலா..! PSTA பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழ்க்கட்சிகள் முயற்சி
பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தினை பாதுகாக்கும் சட்டம் எதிர்காலத்தில் ஒரு பயங்கரமான சூழலை உருவாக்கப் போகின்றது. இந்த அரசாங்கம் தனது எதிர்கால நிலைப்பாட்டை எவ்வாறு மாற்றப் போகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கான பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் தொடர்பிலான செயலமர்வு நேற்று(07.11.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
அநுர அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம், மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் அதன் தாக்கங்கள் தொடர்பிலான தெளிவான விளக்கங்களையும் வழங்கும் வகையில் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்கை மாற்றுகளுக்கான மையம், சமூக ஊடக வெளிப்பாட்டிற்கான கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் முன்னாள் தலைவர் சம்பத் சமரக்கோன் தலைமை தாங்கி நடத்தியதுடன், சிரேஷ்ட சட்டத்தரணி தம்மிக்க சில்வா சட்டமூலங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளார்.
அத்துடன், நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி சிறிநாத், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
PSTA சட்டமூலத்திற்கு எதிர்ப்பு
எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகள் இருக்கின்றன.
12 உள்ளூராட்சி சபைகளில் ஒன்பது உள்ளூராட்சி சபைகள் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், மூன்று உள்ளூராட்சி சபைகள் எங்களுடைய சகோதர முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றதாகவும் இருக்கின்றன.
எங்களைப் பொறுத்தமட்டில் இந்த தமிழ் பேசுகின்றவர்கள் என்ற அடிப்படையில், கடந்த கால பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலமாக நாங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் சொல்லக்கூடிய ஒரு உத்தரவாதம் என்னவென்றால், எங்களுடைய ஒன்பது பிரதேச சபைகள் மற்றும் மூன்று எங்களுடைய முஸ்லிம் மக்கள் வைத்திருக்கின்ற சபைகள் உட்பட 12 சபைகளுக்கு ஊடாகவும் இந்த மோசமான, அரசை பாதுகாக்கின்ற PSTA மற்றும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட அந்த குற்றங்களை தடுக்கின்ற சட்டத்திற்கு எதிராக நாங்கள் பிரேரணைகளை நிறைவேற்ற வேண்டும்.

அதே போன்று, என்பிபி அரசாங்கம் சார்பாக இங்கு எந்தவொரு பிரதேச சபையிலும் ஆட்சி நடைபெறவில்லை.
ஆகவே அதனை எதிர்க்கக் கூடிய சபைகள் தான் உள்ளதாக நான் நம்புகின்றேன்.
அந்த அடிப்படையில் நாங்கள் நேர்மறையாக சிந்தித்து இந்த விடயத்தை, நாங்கள் எதிர்மறையான இந்த சட்டத்தை எதிர்க்கின்ற செயற்பாட்டை கட்டாயமாக நாங்கள் நிறைவேற்றுவோம், நிறைவேற்றச் செய்வோம் என்றார்.