ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள ஷிசுவோகா (Shizuoka) மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி, இன்று(08.11.2026) அதிகாலை 1.04 மணியளவில், சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஐச்சி மற்றும் ஷிசுவோகா மாகாணங்களில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வியாபாரத் தளங்களின் கண்ணாடிகள் உடைந்ததுடன், கட்டடங்களிலிருந்து மக்கள் அச்சத்தில் வெளியேறியுள்ளனர்.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும், அடுத்த சில நாட்களில், குறிப்பாக அடுத்த 2 முதல் 3 நாட்களில், வலுவான நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், நிலச்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக சில உள்ளூர் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், டோக்கியோ - ஒசாகா இடையிலான புல்லட் தொடருந்து சேவைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டுள்ளன.