தீபாவளி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறப்பு பூஜைகள்
மலர்ந்துள்ள தீபத்திருநாளினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள பல ஆலயங்களில் விசேட பூஜைகள் இன்று(08.11.2026) காலை முதல் சிறப்பாக இடம்பெற்றன.
தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியை ஏற்றும் நன்னாளாகவும், தீமையை வென்று நன்மை நிலைநாட்டப்படுவதைக் குறிக்கும் பண்டிகையாகவும் இந்து மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தீபத்திருநாளை முன்னிட்டு மக்கள் தமது குடும்பங்களின் நலன், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நாட்டின் சுபீட்சம் வேண்டி இறைவனைப் பிரார்த்தித்து வருகின்றனர்.
ஹட்டன்
அந்த வகையில், மத்திய மலைநாட்டின் ஹட்டன் உள்ளிட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் அதிகாலை முதலே பாரம்பரிய சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டு தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
அதிகாலையில் எழுந்த மக்கள் பாரம்பரிய முறைப்படி எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடைகளை அணிந்து தமது குடும்பத்தினருடன் அருகிலுள்ள இந்து ஆலயங்களுக்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாகஇ ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள்ளும் தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
தீபாவளி தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் பரவலாக பல இடங்களிலும் மழை பொழிந்தது. இருந்த போதிலும் மக்கள் ஆலய வழிபாடுகளிலும் தீபாவளி கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

குறிப்பாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு , விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில் பெருமளவான மக்கள் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
மட்டக்களப்பு
தீபாவளித் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு வரலாற்றுப் புகழ்மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று (08) சிறப்பு பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
தீபாவளித் திருநாளின் ஆன்மீக மற்றும் சமய முக்கியத்துவத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த விசேட வழிபாட்டில், இறைவனின் அருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஆலயத்தில் விசேட யாக பூஜை, அபிஸேக பூஜைகள் நடைபெற்றதுடன் பூஜை வழிபாடுகள், பக்தர்களுக்கு ஆன்மீக மகிழ்ச்சியையும் மன அமைதியையும் அளிக்கும் வகையில் அமைந்தன.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08.11.2026) தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மயூரவதனக் குருக்கள் தலைமையில் மூல மூத்தியாகிய ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாருக்கும், ஏயை பரிபாரத் தெய்வங்களுக்கும் கிரியைகள் இடம்பெற்றன. இதன்போது அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
திருகோணமலை
தீபாவளித் திருநாளை முன்னிட்டு, திருகோணமலை வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இன்று (08) விசேட பூஜை வழிபாடுகளும், பிரார்த்தனை நிகழ்வுகளும் நடைபெற்றன.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனனின் ஏற்பாட்டிலும், திருகோணமலை மாவட்ட செயலக இந்து சமய கலாசார உத்தியோகத்தர் திருமதி இலக்குமிதேவி ஸ்ரீதரனின் ஒருங்கிணைப்பிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். குகதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிண்ணியா ஆலங்கேணி அருள்மிகு விநாயகர் ஆலயத்தில் இன்று (08) காலை விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக இடம்பெற்றன.
இன்று காலை 8.30 மணியளவில் ஆலயத்தில் நடைபெற்ற இவ்விசேட பூஜை வழிபாடுகளில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் இடம்பெற்றதுடன், பக்தர்களும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.
கிளிநொச்சி
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 25மாவட்டங்களிலும் தீபாவளி பூசை வழிபாடுகளை இன்று (08.11.2026)மேற்கொள்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான பூசை வழிபாடுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.












