சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 6 ஆங்கில பாடத்திட்டம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சர்ச்சைக்குரிய கல்வித் தொகுதி (Module) தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று, அது தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்த போதே நேற்று(30.01.2026) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள்
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 ஆங்கிலப் பாடத் தொகுதியில், சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பில், அந்த திணைக்களம் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்டிருந்ததுடன், நீதிமன்றத்தின் அறிவிப்புக்கமைய விசாரணைகளின் முன்னேற்றத்தை அதன் அதிகாரிகள் நேற்றும் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
அத்துடன், இந்த வழக்கில் இடையீட்டுத் தரப்பு சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மந்தகதியில் முன்னெடுப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்திலுள்ள கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் பொறுப்புக் கூறவேண்டிய இந்தச் சம்பவத்தில், இரண்டு அதிகாரிகளின் சேவையை மட்டும் இடைநிறுத்தி இதனை ஒரு சாதாரணச் செயலாகக் காட்ட முனைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சர்ச்சைக்குரிய தொகுதியின் 51 மற்றும் 52 ஆம் பக்கங்களில் குறித்த இணையத்தளம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் அந்தப் பக்கங்கள் 47 மற்றும் 48 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மைத்ரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
வாத பிரதிவாதங்கள்
விசாரணை அதிகாரிகள் அந்த தொகுதியொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சர்ச்சைக்குரிய இணையத்தளம் தொகுதியின் 47 மற்றும் 48 ஆம் பக்கங்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று, குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள தொகுதி, கடந்த 2025 டிசம்பர் 23 ஆம் திகதி அச்சிடப்பட்ட ஒன்று என்றும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்பட்ட தொகுதி அதுவல்ல என்றும், வேறொரு தொகுதியையே அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் இடையீட்டுத் தரப்பு சட்டத்தரணிகள் மீண்டும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் பார்த்து கொண்டிருந்த நீதிவான், அந்த இரண்டு தொகுதிகளையும் சான்றுப் பொருட்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது ஏன் எனப் பின்னர் நீதவான் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த விசாரணை அதிகாரிகள், தொகுதியைத் தயாரித்த இரண்டு அதிகாரிகளே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சின் உள்ளக விசாரணையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பதிலளித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
சர்ச்சைக்குரிய சம்பவத்தின் போது கடமை ரீதியான கவனக்குறைவு ஏற்பட்டுள்ளதா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலா?
இதன் மூலம் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலும், இந்த தொகுதி தொடர்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடமும் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு நீதவான் அந்தச் சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் மீது சந்தேகம் நிலவுமாயின், அவரும் இதில் ஒரு சாட்சியாளராக இருக்க வேண்டும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.
அத்துடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறும் கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri