முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர அறுவை சிகிச்சை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (19) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதி
ரணில் விக்ரமசிங்க, மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கிப்புறப்பட்டு சென்றிருந்த நிலையில், புதன்கிழமை (18) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நேற்று இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும்,இந்த அறுவை சிகிச்சை பல மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைத் தொடர்ந்து, அவர் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து ஓய்வு எடுப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த வாரமும் இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மூன்று நாட்கள் தங்கியிருந்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.