ஞானசார தேரரின் பரிந்துரைகள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்! வெளியாகியுள்ள தகவல்
பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மிக முக்கியமான பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் ஞானசாரதேரரின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சர்வகட்சி அரசாங்கத்தின் அவசியம்
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கு சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது அத்தியாவசியமாகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் அனைத்து கட்சிகளின் ஆதரவினையும் பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகின்றது.
ஞானசார தேரர் தலைமையிலான ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
எனவே, ஞானசார தேரரின் தலைமையிலான இந்த ஆணைக்குழுவிற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையில், அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதானது கட்சிகளை ஒன்றிணைப்பதில் சிக்கல்களை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.