தேசிய இனப்பிரச்சினைக்கும் இந்த அரசு தீர்வு காண வேண்டும்:ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு
போதைப் பொருள் கலாசாரத்தையும், பாதாள உலக கலாச்சாரத்தையும் ஒழித்து விடுவது போன்று, தேசிய இன பிரச்சினைக்கும் இந்த அரசு தீர்வு காண வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று(19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பேசுபொருளாக இருப்பது போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிரான அரசினதும், பொலிஸாரினதும் தீவிரமான நடவடிக்கையை குறிப்பிடலாம்.
நாட்டின் எதிர்காலம்
அதேபோன்று பாதாள உலக குழுவினரை உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் இருந்தாலும் சரி அவர்களை நுட்பமாக கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருகின்ற விடயத்திலும் குறிப்பிட்டுதான் ஆக வேண்டும்.
ஆகவே இந்த செயல்கள் என்பது ஆரோக்கியமான விடயங்களாகவே இருக்கின்றன. அது மாத்திரமின்றி இவை பாராட்டக்கூடிய விடயமாகும்.
இந்த நாட்டைப் பொறுத்த வரையில், நாட்டின் எதிர்காலம் எமதும், மக்களின் எதிர்காலம் என்பது, போதை வஸ்து பாவனையாலும் போதை வஸ்து வர்த்தகத்தினாலும், அப்படியே சீரழிக்கக் கூடிய நிலைமை காணப்பட்டது.
பாதாள உலகக் குழு
இந்த போதைப் பொருள் வர்த்தகத்தை செய்கின்ற பாதாள உலகக் குழுக்களைக் கண்டுபிடிப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றாவது அவர்களை கைது செய்து கொண்டு வந்து சட்டத்தின் முன் அவர்களை நிறுத்துவதற்காகவும், அரசு எடுக்கின்ற நடவடிக்கையை இந்த நாட்டின் பொது மக்களாக இருக்கின்றவர்களும், நடுநிலைச் சிந்தனையாளர்களும், பாராட்டித்தான் ஆக வேண்டும். எனவே இந்த விடயத்தை நாங்களும் பாராட்டுகின்றோம்.
அண்மையில் இந்துனோசியா, நேபாளம், ஆகிய இடங்களுக்குச் சென்று பொலிஸார் இவ்வாறு பாரிய குற்ற செயல்களை செய்தவர்களை நாட்டில் எதிர்காலத்தையும், வருங்கால இளம் தலைமுறையினரையும், பாழாக்கக்கூடிய விதத்தில் செயற்படுகின்ற அந்த மோசமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தி நாட்டை சுத்தப்படுத்த வேண்டும்.
நாட்டை தூய்மைப்படுத்தப்பட வேண்டும், என்ற அடிப்படையில் செயற்படுகின்ற நிலைமையை நாங்கள் வரவேற்கின்றோம், பாராட்டுகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.




