மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு!
இலங்கையில் மோட்டார் சைக்கிள்களின் விபத்துகளால் ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் குறைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவோர் அணியும் தலைக்கவசங்களின் தரநிலைகளில் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.
தலைக்கவசங்களின் தரநிலை
இது தொடர்பில் விரைவில் தலைக்கவச தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெரும்பாலான வீதி இறப்புகளுக்கு மோட்டார் சைக்கிள் தொடர்பான விபத்துகளே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முச்சக்கர வண்டிகளின் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பிலும், தற்போதுள்ள சட்டங்கள் உரியமுறையில் செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.