பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை! சாடுகின்றார் முன்னாள் அமைச்சர் ராஜித
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குவதாகத் தெரிவித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசுக்கு அதனை நீக்கும் எண்ணம் இல்லை என்றும், எதிர்க்கட்சியினரை அடக்குவதற்காகவே அந்தச் சட்டம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் எண்ணமும் தற்போதைக்கு அரசுக்கு இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறை
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஆட்சிக்கு வந்ததுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகவே அரசு தெரிவித்திருந்தது. தற்போது இந்த வருடத்துக்குள் அதனை நீக்குவதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறுதான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையையும் நீக்குவதாகக் கூறியிருந்தார்கள். ஆனால், நிறைவேற்று ஜனாதிபதி முறையின் சுவையைத் தற்போது அவர்கள் உணர்கின்றார்கள்.

அதனால் தற்போதைக்கு அதனை நீக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆனால், ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடையும் போது, அடுத்தவருக்குக் கிடைக்கப்போகும் வாய்ப்பைத் தடுப்பதற்காக இதனை அவர்கள் செய்வார்கள் என்றே நான் நினைக்கின்றேன்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள் கூட, இன்று அதே சட்டத்தின் கீழேயே சுரேஷ் சலேயைக் கைது செய்து தடுத்து வைத்திருக்கின்றார்கள்.
இதுவரை எத்தனை பேரை அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கின்றார்கள்? ஜே.ஆர். ஜயவர்தன இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த நாளிலிருந்தே நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன்.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
அன்றும் எதிர்த்தேன், இன்றும் எதிர்க்கின்றேன், என்றும் எதிர்ப்பேன். கடந்த எமது ஆட்சிக் காலத்தில் இதனைச் செய்யுமாறு நாங்கள் கூறினோம்.
அந்த காலகட்டத்தில் ஜனாதிபதி ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார். அதில் இருந்த பல அடக்குமுறைச் சட்டங்களை நீக்கித்தான் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
ஆனால், இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் தேவையில்லை. ஏனென்றால் வடக்கிலும் தெற்கிலும் இப்போது பயங்கரவாதம் இல்லை.

மீண்டும் அப்படி ஏதேனும் ஒன்று வந்தால், நாம் மீண்டும் ஒரு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இப்போது அதனைத் தொடர்ந்து வைத்திருப்பதன் நோக்கம் என்ன? எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கே இதனைத் தொடர்ந்து வைத்திருக்கின்றார்கள்.
அந்தச் சட்டத்தின் மூலம் எந்த நேரத்திலும் ஒருவரைக் கைது செய்து, நீதி விசாரணையின்றி ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் வரை தடுத்து வைத்துக் கொள்ள முடியும் என்பதாலேயே அரசு இதனைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.