வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பி முதலீடு செய்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவி காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (28.06.2026) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவி
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாதிக்கப்பட்ட 30 இறால் பண்ணையாளர்களுக்கு மொத்தமாக 95 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிதியுதவி காசோலைகளை வழங்கி வைத்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும், அதற்காக தேவையான நிவாரண மற்றும் மீள்கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டம் கடல் வளங்கள், வாவிகள் மற்றும் உவர்நீர் வளங்கள் நிறைந்த பிரதேசமாக இருப்பதால், இறால், நண்டு மற்றும் பல்வேறு நீர்வாழ் உயிரின வளர்ப்புகளுக்கான மிகுந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இவ்வளங்களை அறிவியல் ரீதியாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும், சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடல் மற்றும் நன்னீர் மீன்வள வளர்ப்புத் துறையில் அதிகளவான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டால் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றும், இளைஞர்களுக்கு நிலையான வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய தொழில்முயற்சிகள் உருவாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களுக்கான விசேட அழைப்பு
வெளிநாடுகளில் வாழும் மட்டக்களப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு விசேட அழைப்பு விடுத்த அமைச்சர், தங்களது சொந்த மண்ணின் அபிவிருத்தியில் பங்காளிகளாக மாற வேண்டிய தருணம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இயற்கை வளங்களும், முதலீட்டு வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன.கடல் வளங்கள், வாவிகள், இறால் மற்றும் நண்டு வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் பாதுகாப்பான முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.
இதன் மூலம் உங்களுக்கும் பொருளாதார இலாபம் கிடைப்பதோடு, மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.
ஆகவே, புலம்பெயர் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பி முதலீடு செய்து மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்களை மீண்டும் உற்பத்தி செயற்பாடுகளுக்கு திருப்பி, நாட்டின் நீர் வாழ் உயிரின உற்பத்தியை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகவே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கரையோர நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜீ. ஜீ. குணசேன, இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அதிகார சபையின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) பொறியியலாளர் என். சிவலிங்கம், கரையோர நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தித் திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ். ரவிக்குமார், அரச அதிகாரிகள், கடற்றொழில் துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam