நெல் சந்தைப்படுத்தல் விவகாரம் குறித்து அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசாங்கம், உடனடியாக நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக வாங்குவதற்கு முன்வர வேண்டும் என கமக்காரர்கள் அதிகாரசகையின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று(19.05.2026) நடைபெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கான உற்பத்திச் செலவு
அவர் மேலும் கருத்து தெரிவித்தகையில், தற்போதைய நிலையில் எங்களுடைய நெல்லுக்கான உற்பத்திச் செலவு மிக அதிகமாகக் காணப்படுகின்றது.
ஒரு புசல் நெல்லினை நாங்கள் அரசாங்கப் பண்ணையில் வாங்குவதாக இருந்தால் கூட 5,000 அல்லது 6,000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கின்றது.

தற்போதைய உரம் வெளிச் சந்தையில் 18,000, 18,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் 410 ரூபாய், பெற்றோலும் கிட்டத்தட்ட 400 ரூபாய், உழவு இயந்திரங்களுக்கான செலவுகள், உதிரிப்பாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.
அனைத்தையும் பார்க்கும்போது நெல்லினை நாங்கள் உற்பத்தி செய்வதற்கான உற்பத்திச் செலவு மிக அதிகமாகக் காணப்படுகின்றது.
தற்போது எமது கையிருப்பில் உள்ள நெல்லை தனியார் வியாபாரிகள் 6,000, 6,200 ரூபாய்க்கு கொள்வனவு செய்கின்றார்கள். அதாவது, அவர்கள் கோளித்தீனுக்கு என்ற போர்வையில் இந்த நெல்லினை கொள்வனவு செய்ய முயற்சிக்கின்றார்கள்.
நெல்லுக்கான விலையில் வீழ்ச்சி
உதாரணத்திற்கு, ஒரு புசல் விதை நெல் நாங்கள் 6,000 ரூபாய்க்கு வாங்குகின்றோம். அதேநேரம் 65 கிலோ நெல்லை 6,000 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை இருக்கின்றது. எங்களுடைய மூன்று மூடை நெல்லை விற்றால் தான் ஒரு மூடை யூரியா வாங்கக்கூடிய நிலைமையும் இருக்கின்றது.
இந்த நிலைமை தொடருமாக இருந்தால் நாங்கள் விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். அரசாங்கம் அண்மையில் பொன்னி அரிசியினை இறக்குமதி செய்ததாக அறிகின்றோம்.இந்த அரிசி இறக்குமதி செய்ததற்குப் பிறகு தான் இந்த நெல்லுக்கான விலை அதிகமாகக் குறைவடைந்துள்ளது.

அவசரமாக எங்களிடம் இருக்கின்ற நெல்லினை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாகவும் வாங்குவதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் எங்களுடைய விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்குவதோடு, எதிர்வரும் காலத்தில் விவசாயத்தைச் செய்வதா? இல்லையா? என்று யோசித்துக் கொண்டிருக்கின்றோம்.
அது மாத்திரமல்லாமல் வெளிச்சந்தையில் உரம் இப்பொழுது 18,000 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. எங்களுக்குக் கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக முதற்கட்டமாக அரசாங்கம் உரத்தினைத் தந்திருக்கின்றது.
அடுத்த கட்டப் பசளையினை வயல்களுக்குப் போட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. 50 கிலோவிற்கு உட்பட்ட அளவுதான் ஏக்கருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது.
விவசாய பிரச்சினைகளுக்கான தீர்வு
உடனடியாக இன்னும் ஒரு 50 கிலோ யூரியாவை எங்களுடைய விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்குவதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு எங்களுடைய இந்த உள்ளீடுகளையாவது தந்து உதவினால் மட்டுமே நாங்கள் இந்த விவசாயத்தில் இந்த முறை வெல்ல முடியும் என நினைக்கின்றோம்.
அனைத்து களைநாசினி, கிருமிநாசினி எல்லா உள்ளீடுகளும் விலையேற்றம் அடைந்துக் காணப்படுகின்றது. இருந்தாலும் எங்களுடைய நெல்லினை விற்றுக்கொள்ள இயலாத துர்ப்பாக்கிய நிலையில் நாங்கள் உள்ளோம்.

எங்களுக்கு இனி வேறு வழியில்லை.நாளை ஜனாதிபதி எங்களுடைய மட்டக்களப்புக்கு வருகின்றார் எனக் கேள்விப்படுகின்றோம். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு இந்த முறை விவசாயிகள் அழைக்கப்படவில்லை எனவும் அறிவோம்.
விவசாயிகள் சார்பாக ஒருவர் அல்லது இருவரை அழைப்பார்கள். இந்த முறை அதுவும் இல்லை. தயவுசெய்து ஜனாதிபதி எங்களையும் அழைத்து, எங்களுடைய பிரச்சினைகளைக் கட்டாயம் கேட்டுத் தீர்த்துத் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.