கோட்டாகோகம போராட்டக்காரர்களின் அறிவிப்பு! போராட்டக்களத்தின் தற்போதைய நிலவரம் (Video)
கொழும்பு - காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்திலிருந்து எஞ்சியிருந்த தற்காலிக கூடாரங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டுள்ளன.
காலிமுகத்திடலில் உள்ள கோட்டாகோகம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை அதாவது இன்றைய தினம் வரை அகற்றப்பட மாட்டாது என சட்டமா அதிபர் அண்மையில் நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
அத்துடன் முறையான சட்டநடைமுறைகளைப் பின்பற்றாமல் குறித்த கூடாரங்கள் அகற்றப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
என்ற போதும் ஏற்கனவே கோட்டை பொலிஸாரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கைக்கு அமைவாக காலிமுகத்திடல் பகுதியில் இருந்த தற்காலிக கூடாரங்கள் சில அகற்றப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே ஏனைய தற்காலிக கொட்டகைகளும் அப்பகுதியிலிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் முடிவெடுத்துள்ளதாக காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், போராட்டக்களத்திலிருந்து வெளியேறினாலும் கூட எமது போராட்டம் நீடிக்கும். நாங்கள் அரைவாசி வெற்றியை அடைந்தாலும் கூட இன்னும் வெற்றிகளை காண வேண்டியுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
தயவு செய்து அவசரகால சட்டத்தை நீக்க வேண்டும், எமது போராட்டக்கள சகோதரர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இந்த போராட்டக்களத்திலிருந்து நாம் வெளியேறினாலும் கூட நாட்டிற்காக நாம் மீண்டும் எழுவோம். அத்துடன் புதிய பாதையில் நாம் பயணத்தை தொடரவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய பரிமாணம்
இதேவேளை காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான அநுருத்த பண்டார இது தொடர்பில் நேற்றைய தினம் டுவிட்டர் பதிவில், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் போராட்டத்தை புதிய பரிமாணத்திற் கொண்டு செல்லும் நோக்குடன், 2022 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறியதுடன் அதுபற்றி தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்தில் மேலும் பலம் பொருந்தியதாக முழு இலங்கையர்களையும் ஒன்றுபடுத்தி முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.