லிமினிக்குப் பதில் கோட்டாபயவை களமிறக்க மொட்டுக் கட்சி தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்குள் இழுத்து வர மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் முப்படைகள், அவர்களின் குடும்பத்தார் மட்டுமன்றி பெரும்பான்மை இன சிந்தனைக் கொண்ட சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தனி செல்வாக்கொன்று உள்ளது.
மீண்டும் கோட்டாபய
கடந்த காலங்களில் மொட்டுக் கட்சியின் வாக்கு வங்கியில் குறித்த பிரிவின் வாக்குகள் கணிசமான செல்வாக்குச் செலுத்தியிருந்தன.
இந்நிலையில் எதிர்வரும் தேர்தல்களின் போது அதனை மீண்டும் மொட்டுக் கட்சியின் வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதரபுரத்தில் ஆரம்பமாகவுள்ள மொட்டுக்கட்சியின் மக்கள் போராட்டப் பேரணி தொடக்கம் ஏனைய முக்கிய நிகழ்வுகளில் கோட்டாபய ராஜபக்சவை கலந்து கொள்ள வைக்கும் தீர்மானத்தை மொட்டுக் கட்சி மேற்கொண்டுள்ளது.
அதே நேரம் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க, ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியில் இருந்து வந்தவர் என்ற வகையில் அவர் அரசியல் களத்தில் பிரபலம் பெறுவதை ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மொட்டுக் கட்சியின் முக்கிய சக்திகள் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.