கோட்டாபய அமெரிக்கா திரும்பினால் கைது - புலம்பெயர் தமிழர் தாக்கல் செய்த வழக்கு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்தவர் தாம் என புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா திரும்பினால் தான் தாக்கல் செய்த வழக்கு மூலம் கைது செய்யப்பட்டலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். அவர்கள் எவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றனர் என்பது தெரியாது.
பொட்டு அம்மான் உயிரிழந்துவிட்டார்
அவர்கள் எவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றனர் என்பது குறித்து ஆய்வு செய்து பார்க்க வேண்டும். பொட்டு அம்மான் உயிரிழந்துவிட்டார். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் பலர் தற்போது சிறையில் இருக்கின்றனர்.
எனினும், கே.பி போன்றவர்கள் பாதுகாப்புடன் வெளியில் இருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. பிள்ளையான், கருணா அம்மான் மற்றும் கே.பி போன்றவரகளே சிங்கள மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தினர். அவர்கள் அனைவரும் அரச பாதுகாப்புடன் வெளியில் இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு அப்பால் வடக்கு கிழக்கில் பல துணை இராணுவம் செயற்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் மேல் பழியை சுமத்தி பல மோசமான செயற்பாடுகளை துணை இராணுவம் செய்திருந்தது.
வழக்கு தொடர்பான செயற்பாடுகள் ஆரம்பமாகும்
இந்நிலையில், 2019ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கலிபோர்னியா நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்திருந்தேன். அமெரிக்க சட்டத்தரணிகள் மற்றும் யஸ்மின் சூகா ஆகியோருடன் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தோம்.
தான் இலங்கையில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமையால் இந்த வழக்கை தாக்கல் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச மீளவும் அமெரிக்கா திரும்பினால் வழக்கு தொடர்பான செயற்பாடுகள் ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.