இந்தோனேசியாவின் ஊழல் தடுப்பு தலைமை அரசு சட்டத்தரணி வீட்டில் தங்கம் மற்றும் பணம் பறிமுதல்
இந்தோனேசியாவின் முன்னணி ஊழல் தடுப்பு சிறப்புப் பிரிவு தலைமை அரசு சட்டத்தரணி ஃபெப்ரி அத்ரியான்சா என்பவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், கிலோ கணக்கில் தங்கக் கட்டிகளும், கோடிக்கணக்கான ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊழல் முறைப்பாட்டின் எதிரொலியாக அவர் தனது பதவியை சனிக்கிழமை அன்று இராஜினாமா செய்துள்ளார்.
சட்ட ஒழுங்கு நடைமுறையாக்கம்
சட்ட ஒழுங்கு நடைமுறையாக்கத்தின் நேர்மை மற்றும் நடுநிலைமையைப் பேணும் நோக்கில் ஃபெப்ரி அத்ரியான்சா தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அந்த நாட்டின் தலைமை சட்டத்தரணி அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டுக்குக் காரணமான ஊழல் மற்றும் இலஞ்ச விவகாரங்கள் தொடர்பாக ஜகார்த்தா, தெற்கு டாங்கராங் மற்றும் போகோர் உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, ஃபெப்ரிக்கு சொந்தமான வீட்டில் இருந்து 74 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் மற்றும் இந்தோனேசிய ருபியா, அமெரிக்க டொலர், சிங்கப்பூர் டொலர், சவுதி ரியால் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நாணய மதிப்பில் சுமார் 20 மில்லியன் டொலர் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு விவகாரம்
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஃபெப்ரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். மின்வெட்டு விவகாரத்தில் தான் ஏன் விசாரிக்கப்படுகிறேன் என்று தனக்கு புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

58 வயதான ஃபெப்ரி, இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் இலவச பாடசாலை உணவுத் திட்டத்தில் நிலவும் ஊழல் முறைப்பாடு மற்றும் 'கோஜெக்' (Gojek) நிறுவனத்தின் நிறுவனர் நாடிம் மகரிம் மீதான வழக்குகள் உள்ளிட்ட பல முக்கிய உயர் மட்ட ஊழல் வழக்குகளை விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் மீது இதுவரை முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், இந்த விவகாரம் இந்தோனேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.