நாணய நிதியத்திடம் செல்லுங்கள்:அமைச்சர்களின் அழுத்தம் அதிகரிப்பு
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை துரிதப்படுத்துமாறு அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு கொடுக்கும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை தவிர ஏனைய அமைச்சர்கள் அனைவரும் சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதை தான் தொடர்ந்தும் எதிர்த்து வருவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் அப்படியான அதிகாரபூர்வமான கோரிக்கை தமக்கு விடுக்கப்படவில்லை எனவும் உதவிகளை கோரினால், ஆராய தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.



