யாழில் அரசாங்கத்தின் புதிய நிகழ்ச்சி திட்டம்! மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு
‘Glocal Fair - 2023’ கண்காட்சி தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (04.01.2022) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.
யாழில் Glocal Fair - 2023 கண்காட்சி
யாழ்ப்பாணம் முற்றவெளியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் ‘Glocal Fair - 2023’ கண்காட்சி இடம்பெறவுள்ளது.
இந்த நிலையிலேயே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பங்கேற்புடன் இன்று காலை 10:30 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது யாழ். மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) முரளிதரன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாவட்ட செயலக அதிகாரிகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கண்காட்சியின் நோக்கம்
‘Glocal Fair - 2023’ கண்காட்சிக்கு செய்ய வேண்டிய ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பில் அதற்கு பொறுப்பானவர்களுடன் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகையில், இந்த கண்காட்சி மூலம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும், உள்ளூர் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்பு வழங்குநர்களையும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைப்பதே நோக்கமாகும்.
அத்துடன் அமைச்சினால் வழங்கப்படும் சேவைகள், தொழிலாளர்களின் தொழிலாளர் மற்றும் நலன்புரி பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவதற்கு இப்பகுதி மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.