எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள் : கிளிநொச்சியில் தபால் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை
'எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்' எனும் கருப்பொருளின் கீழ் நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக வடக்கு மாகாணத்தில் படையினர் மற்றும் ஏனைய திணைக்களங்கள் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தத்தை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட ஜெயபுரத்தில் இன்று (05.03.2024) நடைபெற்றுள்ளது.
காணி விடுவிப்பு
வடக்கு மாகாணத்தில் பொது மக்களின் காணிகளை அரச திணைக்களங்கள் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி குறித்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் காணிக்கு உரிமையாளர்களான மக்கள் காணிகள் இன்றியும் வாடகை வீடுகளிலும் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர்.
குறித்த காணிகளை விடுவித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு ஐந்தாயிரம் தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் காணிகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்த பின்னர் ஜெயபுரம் தபாலகத்தின் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு காணி விடுவிப்பு தொடர்பான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேத்தை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் வருகை தந்திருந்ததுடன் நேற்று மன்னாரிலும் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |