புடின் விடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்துள்ள ஜேர்மனி
அமெரிக்கா, 2026ஆம் ஆண்டு முதல், தொலைதூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை ஜேர்மனியில் நிறுவ திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.
அமெரிக்கா அவ்வாறு ஜேர்மனியில் ஏவுகணைகளைக் கொண்டு நிறுவுமானால், பதிலுக்கு மேற்கத்திய நாடுகளைத் தாக்கும் தொலைவில் ரஷ்யாவும் ஏவுகணைக் கொண்டு நிறுவும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏவுகணை பிரச்சினை
இப்படி ஏவுகணைகளைக் கொண்டுவந்து ஜேர்மனியில் நிறுவும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், பனிப்போர் முறையில், ஏவுகணை பிரச்சினையைத் தூண்டும் அபாயத்தை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புடினுடைய மிரட்டலை ஜேர்மனி அலட்சியம் செய்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புடின் விடுத்த எச்சரிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் பேசிய ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளரான Sebastian Fischer, இப்படிப்பட்ட கருத்துக்கள் எங்களை பாதிக்க அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், ஜேர்மன் அரசின் செய்தித்தொடர்பாளரான Christiane Hoffmann என்பவரும், புடினுடைய கருத்துக்கள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே செய்யப்பட்டுள்ளன எனவும், அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ரஷ்யாவின் நடவடிக்கைகள்தான் அவசியமாக்கியுள்ளன என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யா, ஐரோப்பாவில் கொண்டிருந்த சமநிலையான நிலைப்பாட்டை மாற்றி, ஏவுகணைகளைக்கொண்டு ஐரோப்பாவையும் ஜேர்மனியையும் அச்சுறுத்துவதால், அப்படி ஏதாவது நடக்கும் பட்சத்தில், அதை எதிர்கொள்ளும் வகையிலேயே நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டியதாய் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |