ரணிலின் தந்திரத்தை கையாளும் கோட்டாபய! ராஜபக்ச, ரணில் அரசியல் மரபணு உறவு
ராஜபக்ச - ரணில் உறவு முறை
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த தீர்மானித்த போது, தென் பகுதிக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க அருமையான கதை ஒன்றை கூறினார்.
மகிந்த எனது உறவினர் என ரணில் கூறியிருந்தார். ரணிலின் இந்த கதையை கேட்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மகிந்த ராஜபக்ச ரணிலின் உறவினர் என்பது உண்மையா என ரணிலிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். இதனை சேம் விஜேசிங்கவிடம் போய் கேளுங்கள் என ரணில் பதிலளித்தார்.
ரணில் கிண்டலான புன்னகையுடன் இந்த பதிலை வழங்கியிருந்தார். ஊடகவியலாளர் சேம் விஜேசிங்கவின் வீட்டுக்கு சென்று விசாரித்தார். ரணில் கூறியது சரி. சேம் விஜேசிங்க கெட்டமான கிராமத்தை சேர்ந்தவர். ராஜபக்சவினரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள்.
சேம் விஜேசிங்க, ஊடகவியலாளரிடம் ரணில் மற்றும் மகிந்த இடையிலான உறவு முறையை இவ்வாறு விபரித்தார்.
“ மகிந்தவின் தந்தையின் சகோதரர் டி.எம். ராஜபக்ச, வீரதுங்க குடும்பத்தில் திருமணம் செய்தார்.வீரதுங்க குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஜே.ஆர். ஜெயவர்தனவின் சகோதரி ஒருவரை திருமணம் செய்தவர். ரணில், ஜெயவர்தனவின் மருமகன். ராஜபக்ச,ஜெயவர்தன, விக்ரமசிங்க, விஜேவர்தன குடும்பத்தினர் இந்த வகையிலேயே உறவினர்கள்” எனக் கூறினார்.
சேம் விஜேசிங்க, ரணிலின் தந்தையின் சகோதரியை திருமணம் செய்தவர். இந்த உறவு காரணமாகவே ராஜபக்சவினர் ரணிலையும் ரணில், ராஜபக்சவினரையும் நம்புகின்றனரோ? உறவு முறையும் காரணமாக இருக்கலாம்.
அரசியல் மரபணு உறவு
எவ்வாறாயினும் மகிந்த பிரதமர் பதவியை கைவிட்டுச் செல்லும் போது பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க ராஜபக்சவினர் அஞ்சினர். சஜித்தை பிரதமராக நியமிக்கவும் பயந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அந்த பதவியை வழங்க அச்சம் கொண்டனர்.
மீண்டும் அரசாங்கத்தின் அதிகாரத்தை பெற முடியாது போகும் என்ற அச்சமே இதற்கு காரணம். நம்பிக்கை மற்றும் உறவு முறை கருதியே ரணிலை பிரதமராக நியமித்தனர். காலிமுகத் திடல் போராட்டம் முடிந்த பின்னர் ரணிலிடம் இருந்து மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிந்தே அவரை பிரதமராக நியமித்தனர்.
ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டு வரும் வரை ரணில் பிரதமர் பதவியையும் அரசாங்கத்தையும் பாதுகாப்பார் என நினைத்தே ராஜபக்சவினர் அவருக்கு பிரதமர் பதவியை கொடுத்தனர். ரணில் மற்றும் ராஜபக்சவினர் இடையிலான உறவு முறை எப்படி இருந்தாலும் இவர்களுக்கு இடையில் ஒரு அரசியல் உறவு முறை இருக்கின்றது.
மக்கள் செல்லுமாறு கூறினாலும் கேட்டும் கேட்காதவர்கள் போல் பற்றிப்பிடித்துக்கொள்ளும் அரசியல் மரபணு இவர்கள் இரண்டு தரப்புக்கும் இருக்கின்றது.
ரணிலின் தந்திரம்
1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், 1997 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் 1999 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது.
இந்த தோல்வியின் பின்னர், ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கட்சியின் மூத்த உறுப்பினர்களான விஜேபால மெண்டிஸ், நந்தா மெத்தியூ, சுசில் முனசிங்க கிளர்ச்சி செய்தனர். இது ரணிலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது போராட்டம்.
எனினும் தாம் தோல்வியடைந்தது தேசிய தேர்தலில் அல்ல எனக் கூறி ரணில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இதனையடுத்து 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டார்.
1999 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் என இரண்டு தேர்தல்களிலும் தோற்றுப் போனார். இதனையடுத்து ரணிலுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் காமினி அத்துகோரள மற்றும் கட்சியின் தவிசாளர் கரு ஜயசூரிய ஆகியோர் கிளர்சசியில் ஈடுபட்டனர்.
கட்சியின் பொதுச் செயலாளரும், தவிசாளரும் தனக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதை கண்டு ரணில் பயந்தார். கிளர்ச்சியை நீர்த்து போக செய்ய ரணில், கரு ஜயசூரியவை பிரதித் தலைவராகவும் காமினி அத்துகோரளவை உப தலைவராகவும் நியமித்தார்.
இதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தோல்வியின் பின்னரே ரணிலுக்கு எதிரான மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் போராட்டம் வெடித்தது.
இந்த போராட்டத்தில் 2001 ஆம் ஆண்டு ரணில் தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஜீ.எல். பீரிஸ், எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் ரணிலுக்கு மிக நெருக்கமானவரான மிலிந்த மொரகொடவும் ராஜித சேனாரத்ன ஆகியோர் சம்பந்தப்பட்டிருந்தனர்.
ரணிலை காப்பாற்றிய மகிந்த
ரணிலால் அந்த போராட்டத்தை இலகுவாக அடக்க முடியவில்லை. அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கரு ஜயசூரிய உள்ளிட்டவர்களை தனது அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டு, ரணிலுக்கு அந்த போராட்டத்தை அடக்க உதவினார்.
இவர்கள் கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், கரு ஜயசூரியவுக்கு வழங்கிய பிரதித் தலைவர் பதவி, எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு வழங்கிய தேசிய அமைப்பாளர் பதவி,உப தலைவர் பதவி ஆகியவற்றை இரத்துச் செய்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு தலைவர் பதவி மட்டுமே இருப்பதாக கூறினார்.
2008 ஆம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதன் காரணமாக ரணிலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்தது. அந்த போராட்டத்தில் இருந்து ஜோன்ஸ்டன் உள்ளிட்டோர் ரணிலை காப்பாற்றினர்.
தனக்கு எதிரான இந்த போராட்டத்தை அடக்க ரணில், சரத் பொன்சேகாவை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தி, புதிய முகம் ஒன்றை கொண்டு வந்துள்ளதாக கூறினார்.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தன்னை தோற்கடிக்க சதி செய்தார் எனக் கூறி பொன்சேகா ரணிலுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன் ரணிலிடம் இருந்து விலகிச் சென்றார்.
2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை சந்தித்த பின்னர், சஜித், கரு ஜயசூரியவுடன் இணைந்து ரணிலுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்.
கரு ஜயசூரிய மற்றும் சஜித் ஆகியோருக்கு இணை பிரதித் தலைவர் பதவிகளை வழங்கி அதனை அடக்கினார். எனினும் ரணிலுக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை.
2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல், 2012, 2013 மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணிலுக்கு எதிரான நிலைப்பாடுகள் வலுவடைந்தன.
ரணிலை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விரட்டுவதற்காக மாத்தறையில் இருந்து பேரணி நடத்தப்பட்டது. விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து கட்சியின் தலைமையகமான சிறிகொத்த நோக்கி பேரணி செல்லும் போது, மகிந்தவின் அரசாங்கம் சிறிகொத்த அமைந்துள்ள வீதியை செப்பனிடுவதற்காக வீதியை மூடி பேரணியை நிறுத்தியது.
இதன் பின்னர் சஜித் மற்றும் கருவின் ஆதரவாளர்கள் சிறிகொத்த மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். ரணிலை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் அறிக்கை வெளியிடும் போது, மாநாயக்க தேரர்கள், தொழில் அதிபர் மஹாராஜாவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுகின்றனர் என ரணில் கூறினார்.
எனினும் ரணிலை காப்பாற்றுவது கடினமானது. ரணில் ஐக்கிய தேசியக் கட்சியில் தலைமைத்துவ சபை ஒன்றை நியமித்து அதன் தலைமை பொறுப்பை கரு ஜயசூரியவுக்கு வழங்கினார்.
2015 ஆம் ஆண்டு ரணில் பிரதமரமாக பதவியேற்று, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்தது. இதன் பின்னர் ரணிலுக்கு எதிராக கட்சிக்குள் போராட்டம் மீண்டும் வெடித்தது.
ரணில் அதிகாரத்தை பயன்படுத்தி அதனை அடக்கினார். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு பின்னர் ரணில் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என கட்சிக்குள் குரல் எழுப்பப்பட்டது.
ரணில் விலகவில்லை. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலரை தவிர அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி, சஜித்துடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியை ஆரம்பித்தனர்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரணில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிய பறிக்கொடுத்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேசிய பட்டியலில் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சி ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதன் பின்னர், ரணிலுடன் இருந்த ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க, அர்ஜூன ரணதுங்க உள்ளிட்மோர், ரணிலை கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்தனர்.
எனினும் ரணில் விலகவில்லை. தலைமை பதவியில் இருந்து விலகுமாறு கட்சியினர் மற்றும் மக்களின் போராட்டத்தை எதிர்கொண்ட முதல் தலைவர் ரணில் விக்ரமசிங்க.
ரணிலும் கோட்டபாயவும்
இரண்டாவது தலைவர் கோட்டாபய ராஜபக்ச. ரணிலுக்கு எதிராக அன்று போராட்டம் நடத்தியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர். கோட்டாபயவுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பொதுமக்கள். கோட்டாவும் ரணிலும் இ்நத போராட்டத்தை அடக்க பலவற்றை செய்கின்றனர்.
முதலில் ராஜபக்சவினர் அங்கம் வகித்த அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதன் பின்னர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் உக்கிரமடைந்ததன் காரணமாக மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகி, போராட்டகாரர்களை தாக்கி அச்சுறுத்த ராஜபக்ச குடும்பம் முயற்சித்தது. அதுவும் வெற்றியளிக்கவில்லை.
மகிந்த பதவி விலகி விட்டார். போராட்டம் தொடர்கின்றது. இதன் பிரதிபலனாக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச தற்போது ரணிலின் தந்திரத்தை பயன்படுத்துகிறார். ரணிலை அழைத்து பிரதமர் பதவியை வழங்கி, போராட்டத்தை அடக்க முடியுமா என்று பார்த்தார்.
பொன்சேகாவை அழைத்து போராட்டத்தை அடக்க முயற்சித்தார். பிரதமர் பதவியை ஏற்குமாறு பொன்சேகாவிடம் கேட்ட போது அவர் அதனை ஏற்க மறுத்து விட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்க முயற்சித்தார். ரணில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியை தக்க வைக்க ஆடிய விளையாட்டுக்களையே கோட்டாபயவும் ஆடி வருகிறார்.
இறுதியில் பலம் பொருந்திய யானையான ஐக்கிய தேசியக் கட்சியை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்லும் வரையில் ரணில் தனது விளையாட்டை விளையாடினார்.
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்ட இலங்கையை இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளியாக மாற்றும் வரை கோட்டாபய ஜனாதிபதி பதவியை பற்றிப்பிடித்துக்கொண்டு தனது விளையாட்டை விளையாடி வருகிறார்.
கோட்டா கோ ஹோம்
“கோட்டா கோ ஹோம்” கோட்டாவை வீட்டுக்கு செல்லுமாறே மக்கள் இந்த வார்த்தைகளால் கூறுகின்றனர். எனினும் தனக்கு பதிலாக ராஜபக்சவினர் உட்பட பொதுஜன பெரமுனவை வீட்டுக்குச் செல்லுமாறு கோட்டா கூறுகிறார்.
ரணில் ஒரு கட்சியுடன் விளையாடினார். கட்சி அழிந்து போனால், புதிய கட்சியை உருவாக்கலாம். ஆனால், நாடு அழிந்து போனால், நாட்டை உருவாக்க முடியாது.
கோட்டாபயவை போல் ராஜபக்சவினரும் அதனை அறிந்துக்கொண்டே ரணிலை பிரதமராக நியமித்தனர். இலங்கை முழுவதும் மக்கள் கிராமங்களை உருவாக்கினாலும் அதிகாரத்தை கைவிடப் போவதில்லை என்பதை உணர்த்தவே அவர்கள் ரணிலை பிரதமராக நியமித்தனர்.
இப்படி பார்க்கும் போது சேம் விஜேசிங்க கூறிய இரத்த உறவை விட ராஜபக்ச மற்றும் விக்ரமசிங்கவினரின் அரசியல் மரபணு உறவு இவர்களை ஒன்றிணைத்துள்ளதாகவே தெரிகிறது.
கட்டுரையாளர் - உபுல் ஜோசப் பெர்னாண்டோ
மொழியாக்கம் - ஸ்டீபன் மாணிக்கம்

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
