பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலகப்போவதில்லை! ஆளுங்கட்சி வெளியிட்ட அறிவிப்பு
பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியில் இருந்து விலகப்போவதில்லை. அதற்குரிய எந்தவொரு தேவையும் தற்போது எழவில்லை என்று ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
கல்விக் கட்டமைப்பைச் சீர்குலைத்துள்ள பிரதமர் பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியிருந்தார்.
கல்வி மறுசீரமைப்பு
இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஆளுங்கட்சி எம்.பியான தேவானந்த சுரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“நாட்டுக்கு, மாணவர் சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்ககூடிய வகையில் எந்தவொரு கல்வி மறுசீரமைப்பும் இடம்பெறமாட்டாது. நாட்டு மக்கள் எமக்கு வழங்கிய ஆணை என்னவென்பது எமக்குப் புரிகின்றது. அதற்கமையவே எமது செயற்பாடு இடம்பெறும்.
மக்களுக்குத் துளியளவும் துரோகம் இழைக்காத வகையில் அரசின் பயணம் தொடரும். கல்வி மறுசீரமைப்பு என்பது காலத்தின் கட்டாய தேவையாகும். எனவே, இந்த விடயத்தில் குறுகிய நோக்கில் அரசியல் நடத்துவதற்கு எவரும் முற்படக்கூடாது.
போலித்தகவல்களை பரப்புதல்
நாட்டுக்குப் பொருத்தமான கல்வி முறைமையை உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் பிரதமரை இலக்கு வைத்து போலித் தகவல்களைப் பரப்புவதற்குச் சிலர் முற்படுகின்றனர்.
ஆளுங்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும் முற்படுகின்றனர். ஆனால், எதிரணியின் கனவு பலிக்காது. பிரதமர் பதவி விலக வேண்டிய தேவை எழவில்லை. அவர் பதவி விலகவும் மாட்டார்." - என்றார்.