போதைப் பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்துவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால சூளுரை
இலங்கையின் எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருளின் பிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் கும்பல்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் - இலங்கை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நேற்று(05.01.2026)கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"போதைப்பொருள் வர்த்தகம் இலங்கையில் பாரிய புற்றுநோயாகப் பரவியுள்ளது. நாட்டின் எதிர்காலச் சந்ததியினரைப் போதைப்பொருளின் கெடுபிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளும் போதைப்பொருள் வர்த்தகமும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இவற்றை வேரோடு ஒழிப்பதற்குப் பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல், வர்த்தகம், சந்தையில் உள்ள கேள்வி ஆகியவற்றை முழுமையாக ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில இவ்வருடம் மாத்திரம் 10 ஆயிரம் புதிய உத்தியோகத்தர்களைப் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் என்பன பெறப்பட்டுள்ளன.
அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக நிலுவையிலிருந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ஏற்கனவே 5 ஆயிரம் பேருக்குப் பதவி உயர்வுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடம் மேலும் 5 ஆயிரம் பேருக்குப் பதவி உயர்வு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் அர்ப்பணிப்பு
பொலிஸ் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்குத் தகுந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பொலிஸ் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், உத்தியோகத்தர்களுக்கான ஏனைய நலன்புரி வசதிகளை உறுதிப்படுத்தவும் அரசு முன்னுரிமை அளித்துள்ளது.

பழைய பொலிஸ் முறைகளைக் கொண்டு எதிர்வரும் காலங்களிலும் முன்னோக்கிச் செல்ல முடியாது. பொலிஸ் திணைக்களத்தை முழுமையாக நவீனமயப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய பொலிஸ் சேவைக்குள் நவீன தொழில்நுட்பத்தை இணைத்து தொழில்நுட்பம் சார்ந்த அறிவுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.
தற்போதைய பொலிஸ் சேவையின் வளர்ச்சிக்குப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் அனுபவமிக்க வழிகாட்டல் பெரும் பலமாக உள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam