குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மீறினால் பெருந்தொகை அபராதம்
தங்களுடைய வதிவிட விசாவை மீறி குவைத்தில் வேலைக்காக தங்கியிருக்கும் மற்றும் பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்கள் அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்பு காலம் கடந்த 17 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது மன்னிப்பு காலம்
தற்போது குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக சுமார் 19,620 இலங்கையர்கள் தங்கி இருப்பதாகவும், அவர்களில் 5,000 இலங்கையர்கள் இலங்கைக்கு திரும்புவதற்காக தமது தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் இலங்கைக்கான தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த பொதுமன்னிப்புக் காலத்திற்கு அப்பால் இலங்கைக்கு வரவேண்டுமானால், அவர்கள் கைது செய்யப்பட்டு கைரேகைகள் பதியப்பட்டு, 650,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் குவைத்துக்குள் நுழைய முடியாதவாறு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த பொது மன்னிப்பு காலத்தில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறினால், இந்த அபராதங்களை செலுத்தவோ அல்லது பிற சட்ட நடவடிக்கைகளுக்கு இணங்கவோ தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |