லெபனானில் காசா பாணியில் 'மஞ்சள் கோடு' கட்டுப்பாட்டு மண்டலம்: இஸ்ரேல் அதிரடி
தெற்கு லெபனானில் 'மஞ்சள் கோடு' (Yellow Line) எனப்படும் புதிய பாதுகாப்பு எல்லை மண்டலத்தை அமைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) முதன்முறையாக அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு ஹிஸ்புல்லா அமைப்புடன் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, லெபனான் எல்லைக்குள் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்திற்கு "பாதுகாப்பு மண்டலம்" உருவாக்கப்படும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த எல்லைக் கோடு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 'மஞ்சள் கோடு' பகுதியைத் தாண்டி இஸ்ரேலிய வீரர்களை நோக்கி முன்னேற முயன்ற "பயங்கரவாதிகள்" மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
77 பாலஸ்தீனியர்கள்
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இந்த எல்லைக் கோடு வரையறுக்கப்பட்டிருந்தாலும், அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தங்கள் வீரர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் போது, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் இஸ்ரேலிய படைகளையும் பிரிப்பதற்காக இதேபோன்ற ஒரு 'மஞ்சள் கோடு' பயன்படுத்தப்பட்டது.
காசாவில் இந்தக் கோட்டைத் தாண்ட முயன்ற 77 பாலஸ்தீனியர்கள் கடந்த மூன்று மாதங்களில் இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்போது அதேபோன்ற ஒரு கடுமையான கட்டுப்பாட்டு முறையை இஸ்ரேல் லெபனானிலும் கொண்டு வந்துள்ளது. லெபனான் அரசாங்கம் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புடன் எட்டப்பட்ட 10 நாள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நடுவே, இஸ்ரேலின் இந்த தன்னிச்சையான 'பாதுகாப்பு மண்டல' அறிவிப்பு பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இது குறித்து லெபனான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில்கள் எதுவும் வரவில்லை. இந்த 'மஞ்சள் கோடு' நடைமுறை, தற்காலிக போர்நிறுத்தத்தை நிரந்தர அமைதியாக மாற்றுவதில் பெரும் சவாலாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.