கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கொலைகாரனை காதலனாக மாற்றியுள்ள இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம் தற்போது இலங்கையில் மிகபெரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.
நீதிமன்ற கூண்டிற்குள் வைத்து பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்ட 8 மணிநேரத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் தொடர்பான புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.
குற்றவாளியின் புகைப்பட சர்ச்சை
இந்தநிலையில், குறித்த கொலையாளி தொடர்பான புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சபையில் வைத்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
துப்பாக்கிதாரியை 8 மணிநேரத்திற்குள் கைது செய்தமை தொடர்பில் இலங்கை பொலிஸாரை பாராட்டிய அவர், அதேசமயம் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
“கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கான ஒப்பந்தம் துபாயில் இருக்கும் ஒரு பாதாள உலகக் குழுவின் தலைவரால் வழங்கப்பட்டது.
ஒரு குற்றவாளியை கைது செய்தாலும், உடந்தையாக இருந்த பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸாரால் முடியவில்லை.
ஏன் ஒரு குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டீர்கள். துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் படங்களைப் பகிர அனுமதிக்காதீர்கள். படங்களைப் பாருங்கள், குற்றவாளி அதிகாரிகளிடம் பாசமாக நடந்துகொள்வது போல் தெரிகிறது. புகைப்படத்தை வெளியிட்டு கொலைகாரனை காதலனாக மாற்றிவிட்டார்கள்“ என தெரிவித்துள்ளார்.