மாலதி நினைவேந்தல் விசாரணை: குற்றத்தடுப்புப் பிரிவில் நாளை முன்னிலையாகும் கஜேந்திரன்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான விசாரணைக்காக, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் நாளை(20) முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
இன்று(19) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தமை தொடர்பில் ஊடகங்களால் வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மாலதியின் நினைவேந்தல்
இது தொடர்பில் இன்று பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறுகையில்,
"அம்பாறையில் இன்று முன்னெடுக்கப்பட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்காக நான் சென்றிருந்தவேளை, நேற்று எனது வீட்டில் இந்த அழைப்பாணை வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வை முடித்த பின்னர் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுவதாகப் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, தற்போது யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருக்கின்றேன்.
நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் நேரில் முன்னிலையாகி விசாரணைக்கு முகம்கொடுக்கவுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.