குற்றவியல் நீதி தொடர்பில் வாய் திறக்காத வெளிவிவகார அமைச்சர் - சபையில் கஜேந்திரகுமார் எம்.பி. குற்றச்சாட்டு
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் நல்லிணக்க அலுவலகம் வலுப்படுத்தப்படும் என்றும், போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவாவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், குற்றவியல் நீதி தொடர்பில் ஒரு வார்த்தையையும் அவர் கூறவில்லை. மாற்றம் என்று கூறிக்கொண்டு வந்த இந்த அரசும் பழைய எண்ணப்பாடுகளையே கொண்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள்
அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த நாடாளுமன்றத்தில் இதே தலைப்பின் கீழ் விவாதத்தில் கலந்து கொண்டிருந்த போது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் சில உறுப்பினர்கள் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்தபோது காணாமல்போனோரின் உறவினர்களையும் சந்தித்ததுடன், கொழும்புக்கு வந்ததும் அது தொடர்பில் அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தனர்.
அந்த அறிக்கையில் இருந்த விடயங்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. பாதிக்கப்பட்ட தரப்பினர் நட்ட ஈட்டுக்கு இணக்கம் தெரிவித்திருந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், அது தவறான தகவல் ஆகும். இதைப் குறிப்பிடுவதற்கான காரணம் என்னவெனில் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகங்கள் நிலவுகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால் அங்கு இன்னும் இராணுவ மயமாக்கலாகவே இருக்கின்றது. பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதைப் போன்றே தெரிகின்றது. சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குத் தண்டனை இடமாற்றங்கள் இடம்பெறுவதால் அங்கே பகைமை உணர்வு காணப்படுகின்றது.
தையிட்டி விகாரை விவகாரம்
இதனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நம்ப வேண்டியுள்ளது. பொலிஸாரின் செயற்பாடுகளில் அவர்கள் தலையிட வேண்டும். கடந்த அரசில் எமது அரசியல் கட்சியினர் தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் உத்தரவு கேட்டபோது நீதிவான் அதற்கு மறுப்புத் தெரிவித்தார்.
எனினும், அந்த எதிர்ப்புப் போராட்டத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விதப்புரைகளை வழங்கியிருந்தார். இதன்படி நாங்கள் அந்த நடவடிக்கையை கவனமாக முன்னெடுத்தோம். எனினும், பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அந்த இடத்துக்குச் சென்று அங்கிருந்த பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளைக் கைது செய்திருந்தனர்.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 8 முறைப்பாடுகள் செய்யயப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகள் சம்பவம் இடம்பெற்ற அன்றே செய்யப்பட்டது. அதன் பிரதிநிதி உடனே அங்கே வந்தார். ஆனால், பொலிஸார் அவரையும் அச்சுறுத்தியுள்ளனர். இன்றுவரையில் அது தொடர்பில் ஏவ்வித விசாரணைகளையும் செய்யவில்லை.
எம்மிடம் ஒரு நம்பிக்கை மட்டுமே உள்ளது. எங்களுக்கு இந்த ஆணைக்குழுவிடம் மட்டுமே செல்ல முடியும். சுதந்திரமாக இந்த ஆணைக்குழுவுக்குச் செயற்பட முடியாவிட்டால் என்ன செய்யலாம். இந்த ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ளார்.
குற்றவியல் நீதி
அவர் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை வலுப்படுத்துவதாகக் கூறியுள்ளார். போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், குற்றவியல் நீதி தொடர்பில் ஒரு வார்த்தையையும் அவர் கூறவில்லை.
யுத்த சம்பவத்தில் குற்றவியல் தொடர்பான நீதி மிகவும் முக்கியமானது. ஆனால் அதனை தவிர அனைத்தையும் வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் பேசியுள்ளார். மனிதப் படுகொலைகளைச் செய்தவர்களை சட்டத்தின் முன் கொண்டு வருவதைத் தவிர அனைத்தையும் கூறியுள்ளார். இவர் பலவற்றை மூடி மறைக்கின்றார்.
இது மிகவும் கவலைக்குரிய விடயமே. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இதனையே செய்தார். முறைமை மாற்றம் என்று கூறிக்கொண்டு வந்த நீங்களும் முன்னைய அரசுகளின் எண்ணப்பாடுகளையே கொண்டுள்ளீர்கள். ஜனாதிபதி தன் மீதான நம்பகத் தன்மையைப் பாதுகாக்க வேண்டுமாயின் அவர் இதில் தலையிட வேண்டும்.
எவ்வாறாயினும் கடந்த 77 வருடங்களாக தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றோம். முன்னைய அரசுகள் வடக்கு மற்றும் கிழக்கு பிரச்சினைகளை எவ்வாறு பார்த்ததோ, தற்போதைய அரசும் அதே பார்வையைக் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
