22ஆவது திருத்தத்துக்கு முடிவு கட்டும் அதிகாரம் எதிர்கால அரசுக்கு உண்டு! முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
அரசமைப்பின் 22ஆவது திருத்தமானது நாட்டின் ஜனநாயக கலாசாரத்துக்கும், மக்கள் உரிமைகளுக்கும் முற்றிலும் முரணானது என்றும், அதனால் அந்தத் திருத்தத்தை முழுமையாக நீக்குவதற்கான பூரண அதிகாரம் எதிர்கால அரசுக்கு உண்டு என்றும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று (29.09.2026) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நீதித்துறை அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளது
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நமது அரசமைப்பின் கீழ் நீதித்துறை அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளதுடன், நாடாளுமன்றம் அந்த அதிகாரத்தை நீதிமன்றத்தின் ஊடாகவே செயற்படுத்துகின்றது. இலங்கையின் அரசமைப்பில், இறைமை மக்களிடமே உள்ளது என்பது மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு சட்டத்தையும் விவாதித்து நிறைவேற்றுவதற்கு மாத்திரம் நாடாளுமன்றத்துக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் சட்டங்களை நிறைவேற்றுவதற்கு மக்களின் நேரடி அனுமதி (சர்வஜன வாக்கெடுப்பு) பெறுவது அவசியமாகும்.
சட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டின்படி, எந்தவொரு நாடாளுமன்றத்தாலும் எதிர்கால நாடாளுமன்றங்களின் கைகளைக் கட்டிப்போட முடியாது. தற்போதைய நாடாளுமன்றம் என்னதான் செய்தாலும், அவற்றை முழுமையாக நிராகரிப்பதற்கான அதிகாரம் எதிர்கால நாடாளுமன்றத்ததுக்கு உண்டு.

22ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்கான உரிமை
மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இறைமையை மீண்டும் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான முழுமையான அதிகாரம் எதிர்கால நாடாளுமன்றத்துக்கு இருப்பதுடன், இன்னும் மூன்று ஆண்டுகளில் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்றத்துக்கு 22ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதற்கான உரிமையும் பொறுப்பும் கடமையும் உண்டு.
இதுபோன்ற விடயங்கள் குறித்துத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திடம் இருக்கக் கூடாது என்பதே எமது கருத்தாகும். அந்த அதிகாரத்தை ஒரு சிறப்பு நீதிமன்றமான 'அரசமைப்பு நீதிமன்றத்துக்கு' வழங்க வேண்டும்.
1972 ஆம் ஆண்டு அரசமைப்பின் கீழ் அத்தகையதொரு அமைப்பு இருந்தது. அந்தத் துறையில் விசேட நிபுணத்துவம் கொண்ட நீதிபதிகள் தனித்துவமாகத் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். எனவே, புதியதொரு முழுமையான அரசமைப்பைத் தயாரிக்கும்போது இத்தகையதொரு நீதிமன்றத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாய தேவையாகும் என்றார்.
பாக்ஸ் ஆபிஸ்: 5 நாள் முடிவில் நடிகர் நானியின் தி பாரடைஸ் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam