எரிப்பொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விலை உயர்வடைந்த போதிலும், தற்போது விநியோகக் கட்டமைப்பு வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் எதிர்வரும் ஜூன் மாதம் வரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(8) புதன்கிழமை நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
எரிபொருள் விநியோகம்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழலால் பூகோள ரீதியாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, எரிபொருள் கப்பல்களுக்கான வாடகைக் கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் சடுதியாக உயர்ந்தமையே உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்குக் பிரதான காரணங்களாக அமைந்தன.

கடந்த பெப்ரவரி மாதத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் இருந்த போதிலும், தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் வழமைக்கு மாறாக அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்தார்கள்.
இதனால் கேள்வி அதிகரித்ததே தவிர, உண்மையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை. கறுப்புச் சந்தையை ஒழிக்கவே கியூ.ஆர். முறைமை மற்றும் வாகன இலக்கத் தகடுகளின் இரட்டை எண் அடிப்படையில் விநியோகிக்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது.
எரிபொருள் கையிருப்பு
தற்போது எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதுடன், எரிபொருள் நிலையங்களில் எவ்வித வரிசைகளும் இல்லை. ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குத் தேவையான எரிபொருள் எம்மிடம் கையிருப்பில் உள்ளது.

கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்கள் தொடர்ச்சியாக நாட்டுக்கு வரவுள்ளதால், விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
எரிபொருள் விநியோகத்தை முறையாக முகாமைத்துவம் செய்வதன் மூலம் நுகர்வோருக்குத் தொடர்ச்சியான சேவையை வழங்க அரசு அர்ப்பணிப்புடன் இருக்கின்றது." என்றார்.