இந்திய நிதியுதவிக்காக மீண்டும் காத்திருக்கும் இலங்கை!
இந்தியாவுக்காக காத்திருக்கும் இலங்கை
எரிபொருளுக்கான புதிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரிக்கான இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலுக்காக இலங்கை காத்திருப்பதாக இலங்கையின் அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை நாடு, அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்தநிலையில், ஏழு தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியில் உள்ளது.
நாடெங்கிலும் உள்ள சில எரிவாயு நிலையங்களில் கிலோமீட்டர்கள் நீளமான வரிசையை காணமுடிகிறது.
வாகன உரிமையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக இரவோடு இரவாக காத்திருப்பதுடன் ஆங்காங்கே போராட்டங்களும் இடம்பெறுகின்றன.
நாணயக்கடிதங்களை திறக்கமுடியவில்லை
இலங்கையால் விநியோகஸ்தர்களுக்கு 725 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த முடியாமை மற்றும் நாணயக் கடிதங்களை திறக்க முடியாமல் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக எதிர்வரும் 5 நாட்களுக்கே எரிபொருள் போதுமானதாக உள்ளது. இதனால் ஜூன் 21 வரை டீசல் மற்றும் பெட்றோல் கையிருப்பை நிர்வகிக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. எனினும் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது.
அடுத்த எட்டு நாட்களில் எதிர்பார்க்கப்படும் கப்பல்கள்
அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை பதுக்கி வைப்பதை நிறுத்தாவிட்டால் கையிருப்பு வேகமாக தீர்ந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மூன்று நாட்களிலும், அடுத்த எட்டு நாட்களில் மேலும் இரண்டு எரிபொருள் இறக்குமதிகளை தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.