அநுர அரசின் சர்வாதிகாரச் செயற்பாடுகள் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் முறையீடு - சாகர காரியவசம் அறிவிப்பு
ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சிக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் சர்வாதிகார செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நேற்று(29.09.2026) சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் ஒத்துழைப்புடன் அரசு அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலை முன் கொண்டு செல்கின்றது. அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டே கைதுகள் இடம்பெறுகின்றன.
அரசியல் உரிமைகளுக்கான போராட்டம்
ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சிக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் அடக்குமுறைகள் குறித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடத் தீர்மானித்தோம்.

இதற்கமைவாகவே நேற்று(29) அமெரிக்கத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியதுடன், எதிர்வரும் நாட்களில் ஏனைய இராஜதந்திரிகளையும் சந்திக்கவுள்ளோம். ஏனைய எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியமில்லை.
நாம் நாட்டுக்காகத் தனித்தே செயற்படுவோம். பிரதான எதிர்க்கட்சியானது அரசின் தற்போதைய கைதுகளுக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
பேச்சுரிமை மற்றும் அரசியல் உரிமைக்காகவே நாங்கள் போராடுகின்றோம். எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவைச் சிறையில் அடைப்பதால் மாத்திரம் அரசுக்கு எதிரான போராட்டம் முடிவடைந்துவிடாது. அரசின் சர்வாதிகாரச் செயற்பாட்டுக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்போம் என்றார்.
பாக்ஸ் ஆபிஸ்: 5 நாள் முடிவில் நடிகர் நானியின் தி பாரடைஸ் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam