நெடுந்தீவில் ரூ.42 மில்லியன் செலவில் எரிபொருள் நிரப்பு நிலையம் : துரிதமடையும் அபிவிருத்திப் பணிகள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் கடல்கடந்த தீவுகளில் முதன்முறையாக, நெடுந்தீவில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள், நேற்று(29.11.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த நிலையத்தை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளனர்.
நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தால் இயக்கப்படவுள்ள இந்த நிலையத்தின் ஊடாக, நெடுந்தீவு மக்களும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் நடைமுறையிலுள்ள அதே விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நெடுந்தீவு மக்களின் நீண்டகாலத் தேவைகளில் ஒன்றாகக் காணப்பட்ட இந்த வசதி நிறைவேற்றப்பட்டுள்ளமை, தீவின் அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதாரச் செயற்பாடுகளிலும் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
42 மில்லியன் ரூபாய் செலவில் எரிபொருள் நிரப்பு நிலையம்
இதன்போது, ஆளுநர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
1991ஆம் ஆண்டு தனது முதலாவது நியமனமாக உதவி அரசாங்க அதிபராக இப்பகுதியில் பணியாற்றிய காலத்திலிருந்தே நெடுந்தீவு மக்களின் வாழ்வியலையும் கடல்வழிப் போக்குவரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் நன்கு அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் இப்பகுதியில் சுற்றுலாத் தகவல் நிலையத்தையும் பயணிகள் இளைப்பாறும் மண்டபத்தையும் திறந்து வைப்பதற்காக வந்திருந்தபோது, மக்களின் நீண்டகாலத் தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

அவற்றில் ஒன்றான எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற இலக்கின் பொருள் தலைநகரில் மாத்திரம் அபிவிருத்தியை ஏற்படுத்துவதல்ல் நாட்டின் கடைக்கோடியில் வாழும் மக்களுக்கும் அடிப்படை வசதிகளையும் சமமான வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுப்பதாகும்.
அந்த வகையில், நெடுந்தீவு போன்ற தீவுப் பிரதேசங்களின் தேவைகளை உணர்ந்து நடவடிக்கை எடுப்பதே அரசாங்கத்தின் அணுகுமுறையாக இருக்கின்றது எனவும், இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆதரவுடனேயே சாத்தியப்படுத்த முடிந்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மக்களுக்கான அபிவிருத்தி பணிகள்
நெடுந்தீவு மக்களின் மற்றுமொரு முக்கியத் தேவையான கடல்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த ஆளுநர், தற்போது சேவையில் உள்ள படகுகளின் குறைபாடுகளைச் சீரமைப்பதுடன், பிரஜாசக்தி திட்டத்தின் ஊடாக 235 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் புதிய படகொன்றைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

குறிகாட்டுவான் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேவேளை, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கடந்த வாரம் போக்குவரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவைச் சந்தித்தபோது, பசுமைத் தீவுகள் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு இறங்குதுறைப் புனரமைப்புக்கான முன்மொழிவைச் சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டல்களையும் அவர் வழங்கியிருந்தார்.
இதன்மூலம் நீண்டகாலமாக நிலவும் கடல்வழிப் போக்குவரத்துச் சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.