நந்திக்கடல் மஞ்சள் பாலத்தின் வடக்கே அமைக்கப்படுமா நன்னீர் மீன்பிடித் தளம்
முல்லைத்தீவில் நந்திக்கடல் மஞ்சள் பாலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வெளியில் நன்னீர் மீன்பிடித் தளம் ஒன்று அமைப்பபடுதலுக்கான தேவை இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துறைசார்ந்த அதிகாரிகளால் சிந்திக்கப்படாத இந்த முயற்சி பற்றி அப்பகுதியில் தொடர்ச்சியான அவதானிப்புக்களை மேற்கொண்டுவரும் சுற்றுச்சூழல் பாதுப்புத் தொடர்பான செயற்பாடுகளில் கரிசனை காட்டிவரும் வேர்கள் தமிழ்ச் சங்கத்தினைச் சார்ந்த ஆர்வலர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
நந்திக்கடல் மஞ்சள் பாலத்தின் கீழ் உள்ள நீரில் மீன்களைப் பிடித்து விற்பனை செய்துவரும் மீனவர்களின் நலன் சார்ந்து அவருடன் உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மஞ்சள் பாலத்தின் வடக்கு பகுதி மீன்பிடித்தளமாக மாற்றம் செய்யப்பட்டால் தண்ணீரூற்று, குமாரபுரம், வற்றாப்பளை, நீராவிப்பிட்டி,கிச்சிராபுரம்,சிலாவத்தை மாதிரிக் கிராமம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் பாரியளவிலான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது திண்ணம்.
நந்திக்கடல் மஞ்சள் பாலம்
நந்திக்கடல் மஞ்சள் பாலம் என்பது முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் முல்லைத்தீவில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இரட்டைப் பாலம் ஆகும்.
ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சி செய்த போது அவர்களால் அமைக்கப்பட்ட இந்த பாலம்; 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முல்லைத்தீவு மாங்குளம் (A34) பிரதான வீதியின் புனரமைப்பின் போது உடைக்கப்பட்டு மீண்டும் புதிய பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளை நிறப் பூச்சைக் கொண்டிருந்த போதும் புனரமைப்புக்கு முன்னர் இந்தப் பாலம் மஞ்சள் வர்ணத்தில் இருந்தது.அதனாலேயே இந்தப் பாலத்தினை மஞ்சள் பாலம் என இப்பகுதி மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இப்போது அது வெள்ளை நிறமான போதும் முன்னர் பயன்படுத்திய பெயரையே இப்போதும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பாலத்தினை அடுத்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் பாதைக்கு திரும்பும் திருப்பம் மூன்றாம் கட்டைச் சந்தி என அழைக்கப்படுகிறது. இதனால் மஞ்சள் பாலத்தினை மூன்றாம் கட்டைப் பாலம் என குறிப்பிடும் மக்களும் இருக்கின்றனர் என இந்த பாலம் தொடர்பில் தண்ணீரூற்று ஊற்றங்கரையைச் சேர்ந்த வயோதிபர் ஒருவருடனான உரையாடலின் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு பாலங்களை கொண்ட நந்திக்கடல் மஞ்சள் பாலம் நிரந்தரமாக தொடர்ந்து நிற்கக்கூடிய தண்ணீரைக் கொண்டுள்ளது. அந்த நீரில் மீன்கள், முதலைகள் என்பவற்றோடு சப்பும் புல்லும் அவற்றுக்குள் வாழும் பல்லின உயிர்க் கூட்டங்களும் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலத்தின் வடக்கில்
நந்திக்கடல் மஞ்சள் பாலத்தின் வடக்கில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கிழக்குப் பகுதியாகவும் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியினால் வளைக்கப்பட்டுள்ளதுமான நந்திக்கடலின் பகுதியே நன்னீர் பின் பிடித்தளம் ஒன்றினை அமைத்துக் கொள்வதற்கான இடமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
இந்த இடத்தின் ஒரு பகுதி நந்தியுடையார் வயல் வெளிகளால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னர் இந்தப் பகுதி விரைவில் வறண்டு போய்விடும்.எனினும் அண்மைக் காலமாக அப்படி நடப்பதில்லை.நீண்ட நாட்களுக்கு நீர் ஏந்தப்பட்டிருப்பதோடு அந்த நீரில் அல்லியும் சப்பும் புல்லும் அதிகமாகவே வளர்ந்துள்ளன.
காலநிலை தோற்றப்பாட்டின் வெளிப்பாட்டு மாறல் அந்தப் பகுதியின் உயிர்த் தன்மை வளர்ச்சியடைந்து வருகின்றதை வெளிப்படுத்துவதாக உணர முடியும்.
இந்த மாற்றத்தை பொது மக்களுக்கு பயன்பாடுடையதாக மாற்றிக்கொள்ள முயல்வதோடு சூழலுக்கு பாதிப்பில்லாத சூழல் நேயத்தன்மையோடு மேற்கொள்ளத்தக்க ஒரு திட்டமிடலாகவே நன்னீர் மீன்பிடித் தளம் ஒன்று அமைப்பபடுதலுக்கான முன்மொழிவை வேர்கள் தமிழ்ச் சங்கத்தின் சுற்றுச் சூழல் ஆர்வலரான அவர் முன்வைத்துள்ளதாக தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
நன்னீர் மீன்பிடித் தளம்
வறண்ட தன்மையில் இருந்து மாறிவரும் நிலத்தொகுதியாக இந்தப் பகுதி மாறி வரும் நிலையில் அந்த மாற்றத்தினை பயனுடையதாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்.
வடகீழ் பருவப் பெயர்ச்சியின் போது ஏற்படும் மழை வீழ்ச்சியினால் (மாரி மழை) பெறப்படும் நீரினை பெற்று இந்தப் பகுதியினூடாகவே பெருங்கடலுக்கு வெள்ள நீர் கொண்டு செல்லப்படுகின்றது.
அவ்வாறே ஊற்றங்கரை சதுப்பு நிலத்தில் இருந்து ஊறி வரும் நீரும் இந்த நிலத்தொகுதியின் ஒரு பகுதியின் ஊடாகவே செல்கின்றது.
இவற்றை ஒருங்கிணைத்து சிறிய குளமாக மாற்றம் செய்யும் போது கோடை காலத்திலும் நீர் தேங்கி இருக்கும் சூழல் தோன்றும்.இதற்காக இந்த பகுதி சற்று ஆழமாக்கப்படுவதோடு குளத்தின் தரை உயிர்நிலமாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் விளக்கியிருந்தார்.
நந்திக்கடலில் நன்னீரை கொண்ட பகுதியாக இந்த பகுதி அமைந்துள்ளது.இதனால் நன்னீர் மீன்பிடித் குளமாக மாற்றியமைத்தால் இலகுவானதாக இருக்கும்.
வெள்ள நீர் வரும் போது குளத்தினை மேவி வழமை போல் கடலுக்குச் செல்லும்.கோடை காலங்களில் தேங்கி நிற்கும் நீரில் மீன்களைப் பிடிக்கும் வசதி ஏற்படும்.மாரி மழை முடிந்ததும் மீன் குஞ்சுகளை விட்டு அடுத்த மாரி மழை தொடங்குவதற்கு முன்பு அறுவடையினைச் செய்யும் சூழலை மீனவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் போது நல்ல தொழில் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் என தன் எதிர்பார்ப்புகளை பகிர்ந்திருந்தார்.
ஏற்படவல்ல நன்மைகள்
வேர்கள் தமிழ்ச் சங்கத்தின் சுற்றுச் சூழல் சார் செயற்பாட்டாளரின் கருத்துக்கள் தொடர்பில் மீனவர்களிடையே கருத்துக் கேட்டல்களை மேற்கொண்டிருந்த போது அப்படியொரு செயற்பாடு சிறியளவிலேனும் முன்னெடுக்கப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் கொஞ்சமேனும் தளம்பலற்றதாக மாறிப் போகும்.
ஆயினும் இதையெல்லாம் யார் வந்து செய்து தரப்போகின்றார்கள்.இவ்வளவு காலமாக இது பற்றி யாரும் பேசியதில்லை.இப்போது தான் ஒரு முன்மொழிவு வருகின்றது.அப்படி நடந்தால் நல்லது என்று தங்களின் ஆதங்கங்களை வெளிக்காட்டியவாறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அதிகளவிலான மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கவல்ல இந்த முன் மொழிவு தொடர்பில் துறைசார் அதிகாரிகள் சிந்திக்கத் தலைப்பட்டால் பல கிராமங்களில் வாழும் மக்களுக்கான புரத உணவு கிடைப்பதை இலகுவாக்கிக் கொடுக்க முடியும்.
நந்திக்கடலின் இந்த பகுதியும் கண்கொள்ளாக் காட்சியாக மாறிப்போகும்.இப்போதெல்லாம் அதிக வெப்பத்தை கொண்ட பகுதியாக இருக்கும் இந்தச் சூழல் மாறும்.
மஞ்சள் பாலவெளியில் உள்ள பறவைகளின் வாழிடச் சூழலுக்கு இது அரண் சேர்ப்பதாக அமையும்.உயிர்ப்பல்வகைமையும் மேம்பட்டுப் பேணப்படும்.
இந்த தோற்றமாற்றம் சிறந்த பொழுது போக்கிடமாகவும் சுற்றுலாத் தளமாகவும் நாளடைவில் மாற்றம் பெறச் செய்து விடலாம் என தொழில் முதலீடுகளில் ஈடுபட்டுவரும் ஒருவர் தன் எதிர்வு கூறல்கறையும் பகிர்ந்து கொண்டிருந்தார்.
பலரது கருத்துக்கள் வாயிலாக வேர்கள் தமிழ்ச் சங்கத்தின் சுற்றுச் சூழல் செயற்பாட்டாளரின் முன்மொழிவு நல்ல பல மாற்றங்களை தரக்கூடியதாகவே தோன்றுவதை புரிந்துகொள்ள முடிகின்றது.
கவனமெடுக்கப்படுமா?
துறைசார் அதிகாரிகள் மாற்றும் முதலீட்டாளர்கள் இது தொடர்பில் கவனமெடுத்துச் செயற்பட முடிந்தால் பொருத்தமான ஆய்வுகளின் ஊடாக சாத்தியப்பாடான செயற்பாடுகளுக்கான திட்டமிடல்களை செய்து மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
சிறியளவிலான முதலீடுகள் மூலம் குறைந்தளவுக்கேனும் இந்த நிலம் ஆழமாக்கப்பட்டோ அல்லது சிறியளவிலான குறுக்கணை ஒன்றின் மூலமோ சிறியளவிலான மீன்பிடித்தளமொன்றினை உருவாக்கிக் கொடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது குறுகியளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீன்பிடித்தல் செயற்பாட்டினை விரிவுபடுத்த முயற்சிக்கலாம்.
பிரதேசங்களில் மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்த தக்க முறையில் மாற்றங்களைச் செய்து கொடுக்கும் போது அவர்களது பொருளாதாரம் மேம்பட்டுச் செல்லும்.
அதிகளவான உதவிகளை வழங்குவதிலும் இத்தகைய முயற்சிகள் நீண்ட நெடிய காலத்திற்குப் பயனுடையதாக நிலைத்திருக்கும் என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.