அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகி வரும் சுதந்திரக் கட்சி
மக்களின் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வுகளை வழங்க முடியாது என்றால், நாடாளுமன்றத்ததில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இடைக்கால அரசாங்கத்தை அமைத்தேனும் தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், மீண்டும் மத்திய செயற்குழு கூடி அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பான தீர்மானத்த எடுக்கும் எனவும் சுதந்திரக் கட்சி கூறியுள்ளது.
இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை ஜனாதிபதி அனுப்பி வைக்க உள்ளதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. மக்கள் தற்போது பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகி உள்ளனர். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவிட்டால், மிகப் பெரிய மக்கள் எதிர்ப்பு உருவாகும் எனவும் சுதந்திரக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் கூடியது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை மற்றும் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, செயற்குழு உறுப்பினர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற விடயத்தை வலியுறுத்தினர்.
எனினும் இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு கட்சியின் தலைரான மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டை வெளியிடுவார் எனக் கூறியுள்ளார்.
அதேவேளை ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன,
நாட்டில் காணப்படும் அரசியல் நிலைமை தொடர்பாக எமது நிலைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பும். அதன் பின்னர் சில முக்கியமான முடிவுகளை எடுக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.