இலங்கை - தாய்லாந்துக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம், முதலீடு, சுங்க செயற்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
அத்துடன் இலங்கை - தாய்லாந்து விமான சேவைகளுக்கு இடையிலான தாராளமயப்படுத்தப்பட்ட புதிய இரு தரப்பு விமான சேவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் இரத்தினக்கல் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (GJRTI) மற்றும் தாய்லாந்தின் இரத்தினக்கல் ஆபரண நிறுவனம் (GIT) ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான விஜயம்
தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார்.
இந்நிலையில், அவர்களுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் மற்றும் அவரது குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வருகைதந்துள்ள தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






