யாழில் மணல் கடத்தலில் நால்வர் கைது: பொலிஸாருக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலடி
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மணல் கடத்தல்
இதன் அடிப்படையில மருதங்கேணி பொலிஸார் செம்பியன்பற்றில் நேற்று(05) மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றியவர் உழவு இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு புல்லாவெளி - இயக்கச்சி காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஜேசிபி இயந்திரத்துடன் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவான மணல் கும்பிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு தொடர்பு இல்லை..
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகக்காக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் அனுமதியுடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும்பண்டார தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் குறித்த செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கும் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களை ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும்பண்டார தெரிவித்துள்ளார்.
அதே போன்ற, சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது போன்று வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் ஆதரவளிப்பதில்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.